ETI வைப்பீட்டாளர்களுக்கு துரித நிவாரண திட்டம்

பொருளாதார சபையில் ஜனாதிபதி வலியுறுத்து

எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென் (ETI) நிறுவனத்தில் பணவைப்பு செய்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான துரித திட்டம் தொடர்பில் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (26) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பொருளாதார சபை ஒன்றுகூடியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ETI நிதி நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கான கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தேசிய பொருளாதார சபை விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், இக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராய்ந்த தேசிய பொருளாதார சபை தனது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. 2015 – 2018 காலப்பகுதியில் இந் நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு மூன்று நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருந்ததுடன், அவற்றுள் இரண்டு உள்நாட்டு நிறுவனங்களும் ஒரு வெளிநாட்டு நிறுவனமும் உள்ளடங்குகின்றன.

இதன்போது உள்நாட்டு நிறுவனங்கள் தொடர்பில் போதுமான கவனம் செலுத்தப்பட்டுள்ளதா? என்பதும் இக் கொடுக்கல் வாங்கல்களின்போது வைப்பீட்டாளர்களுக்கு செலுத்துவதற்காக அதிகபட்ச நிதியை பெற்றுக்கொள்வதற்காக உரிய முறையில் பேரம் பேசப்பட்டதா? என்பதும் தெளிவற்றதாக காணப்படுவதாக தேசிய பொருளாதார சபை தெரிவித்துள்ளது. அத்துடன், இம் மூன்று நிறுவனங்களும் தமது விலைமனுக்களை சமர்ப்பிப்பதற்காக சம சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டதா?என்பதும் நிச்சயமற்றிருப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

வைப்பீட்டாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அந்நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையும் தற்போது நடைபெற்று வருவதோடு, இக்கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் இதன்போது விசாரணை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய ETI நிறுவனத்தின் 20 சதவீத வைப்பீடுகள் தற்போது மீளச் செலுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் 10 சதவீத வைப்பீடுகளை வெகுவிரைவில் மீளச் செலுத்த முடியுமெனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதனிடையே நுண்கடன் தொடர்பாகவும் பொருளாதார சபை தனது விசேட கவனத்தை செலுத்தியுள்ளது. நுண்கடன் துறையில் மக்கள் மிகுந்த அழுத்தத்திற்குட்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அக்கடன்களை வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்யும் முறையொன்றின் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.

அண்மைக்காலத்தில் நுண்கடனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து மீட்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடன் முறையின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டதுடன், அக்கடனை பெற்றுக்கொள்வதற்காக மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் அதன் வினைத்திறனை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவம், நுண்கடன் வட்டி வீதத்தை குறைத்தல் பற்றிய விசேட வேலைத்திட்டம் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய நுண்கடன் வழங்கும் நிறுவனங்களை நெறிப்படுத்தும் நிறுவனமொன்றை தாபித்தல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. அதேபோன்று மக்கள் தமது செயற்பாடுகளை பிரச்சினைகளின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு நிதித்துறை பற்றிய அறிவினை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். டிஜிட்டல் தொழிநுட்பத்தினூடாக கடன் வசதிகளை பெற்றுக்கொடுக்கும் புதிய நடைமுறை காணப்படுவதனால் அதனை உரியவாறு நெறிப்படுத்துவதற்கான பொருத்தமான முறையொன்று தொடர்பாக தேசிய பொருளாதார சபை முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது.

இதனிடையே பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் புதுப்பிக்கப்பட்ட இலங்கையின் பௌதீக திட்டம் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டின் பின்னர் அத்திட்டம் புதுப்பிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இலங்கையின் பௌதீக அமைவிடம், நீர், இயற்கை வளங்கள், கனிய வளங்கள், சுற்றாடல் முக்கியத்துவம் வாய்ந்த வலயங்கள், பொருளாதார வலயங்கள், ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. முதன்மை பொருளாதார அபிவிருத்தி வலயமாக கொழும்புக்கும் திருகோணமலைக்குமிடையிலான மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளை இணைக்கும் பொருளாதார வலயத்தை இனங்காணுதல் தொடர்பாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை