வெனிசுவேல ஜனாதிபதி மீதான சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு

உறுதியான நடவடிக்கைக்கு அமெரிக்கா திட்டம்

வெளிநாட்டு உதவிகளை நாட்டுக்குள் வரவிடாமல் தடுத்துவரும் வெனிசுவேல ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ மீதான சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது. அந்நாட்டின் மீது புதிய தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்கா எச்சரித்திருப்பதோடு இந்த விடுதலை முயற்சியில் கூட்டணி நாடுகளும் இணையும்படி பிரேஸில் அழுத்தம் கொடுத்துள்ளது.

வெனிசுவேல எல்லைகளில் ஏற்பட்ட மோதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டு மேலும் 300 பேர் வரை காயமடைந்த நிலையில், மடுரோவை பதவி கவிழ்க்க சர்வதேச சமூகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று தன்னைத்தானே இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோ அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸும் பங்கேற்கும் லிமா குழு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பில் குவைடோவும் பங்கேற்கவிருந்தார். இந்த மாநாடு கொலம்பிய தலைநகரில் நேற்று ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் உரையாற்றும் பென்ஸ் வெனிசுவேல பிரச்சினை குறித்து “உறுதியான நடவடிக்கை” ஒன்று பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா கடந்த மாதம் வெனிசுவேலாவின் எண்ணெயை இலக்கு வைத்து கடுமையான பொருளாதார தடையை விதித்தது.

இந்நிலையில் மடுரோவின் காலம் எண்ணப்படுவதாக தாம் உறுதியாக நம்புவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார். “வெனிசுவேலா மக்களின் ஜனநாயத்தை உறுதி செய்யும் ஒற்றை செயற்பாட்டையே நாம் இலக்கு வைத்துள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே லத்தீன் அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க நாடான பிரேசில் குவைடோவை இடைக்கால பிரதமராக அங்கீகரிக்காத நாடுகளுக்கு வெனிசுவேலாவின் விடுதலை முயற்சியில் இணையும்படி அழைப்பு விடுத்துள்ளது.

வெனிசுவேல சர்வாதிகாரத்திற்கு எதிராக இராஜதந்திர முற்றுகையை இறுக்குவது குறித்து லிமாக குழு நாடுகளின் மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கொலம்பிய ஜனாதிபதி இவான் டுகு குறிப்பிட்டுள்ளார்.

மடுரோவுக்கு ஆதரவு வெளியிட்டு வரும் சீனா மற்றும் ரஷ்யா, எதிர்க்கட்சியின் மனிதாபிமான உதவி முயற்சி அமெரிக்காவால் திட்டமிடப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சியின் ஓர் அங்கம் என்று குற்றம்சாட்டியுள்ளன.

வெனிசுவேலாவின் எல்லை பகுதிக்கு அனுப்பப்பட்டிருக்கும் மனிதாபிமான உதவிப் பொருட்கள் மடுரோ மற்றும் குவைடோவுக்கு இடையிலான இழுபறியின் பிரதான மையமாக மாறியுள்ளது.

ஆனால் உணவு மற்றும் மருந்து பொருட்கள் கொண்ட உதவி பொருட்களை பெற எல்லையைத் தாண்டும் முயற்சியில் வெனிசுவேலா மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

எல்லைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், தன்னார்வலர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதும், போராட்டக்காரர்கள் சோதனைச் சாவடிகளை எரிப்பதும் எரிப்பொருட்களை பாதுகாப்பு படையினர் மீது வீசுவதும் தெரிகிறது.

Tue, 02/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை