எதிர்க்கட்சித் தலைவர் குவைடோ இராணுவத்துடன் இரகசிய சந்திப்பு

வெனிசுவேல ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவை வீழ்த்துவதற்கு ஆதரவு தேடி இராணுத்தினரை இரகசியமாக சந்தித்ததாக வெனிசுவேல எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோ தெரிவித்துள்ளார்.

கடந்த மாத ஆரம்பத்தில் நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட குவைடோவை அமெரிக்கா மற்றும் பல லத்தீன் அமெரிக்க நாடுகளும் உடனடியாக அங்கீகரித்தன.

பிரதான சக்திகளான ரஷ்யா மற்றும் சீனா, மடுரோவுக்கு அதரவு வெளியிட்டிருப்பதோடு தான் தொடர்ந்து அதிகாரத்தில் நீடிப்பதற்கு தீர்க்கமான சக்தியாக இராணுவம் அவருக்கு ஆதரவு வெளியிட்டு வருகிறது.

சர்ச்சைக்குரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது தவணைக்கு மடுரோ பதவி ஏற்ற பின்னரே தற்போதை அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

“இராணுவப் படைகள் மற்றும் ஆயுதப் படைகளின் உறுப்பினர்களுடன் இரகசிய சந்திப்பு ஒன்றை நாம் நடத்தினோம்” என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் குவைடோ குறிப்பிட்டுள்ளார்.

“அரசை மாற்றுவதில் மடுரோவுக்கு வழங்கும் ஆதரவை இராணுவம் வாபஸ் பெறுவது தீர்க்கமாக உள்ளது. நாட்டின் அண்மைய நெருக்கடியை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இராணுவத்தின் பெரும்பான்மையினர் ஒப்புக்கொள்கின்றனர்” என்றும் அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இராணுவத்தினரில் யாரை சந்தித்தது மற்றும் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது பற்றிக் கூற குவைடோ தவறியுள்ளார்.

அமெரிக்காவுக்கான வெனிசுவேல முன்னணி இராணுவ பிரதிநிதி கேணல் ஜோஷ் லுவிஸ் சில்வா குவைடோவுக்கு ஆதரவு தெரிவித்தபோதும், வெனிசுவேல இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மடுரோவுக்கு தொடர்ந்து ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி மடுரோ பதவி விலகக் கோரியும் மனிதாபிமான உதவிகளை நாட்டுக்குள் அனுமதிக்கக் கோரியும் வெனிசுவேலாவின் பல நகரங்களிலும் மருத்துவர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் கடந்த புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தலைநகர் கரகாஸிலும் சிறுசிறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கும் வெனிசுவேலாவில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 02/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை