சட்டவிரோத நடைபாதை கடைகள் அனைத்தையும் அகற்றுமாறு பணிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கு விரைவில் சுற்றுநிருபம்

- அனுமதியற்ற சகல நடைபாதை கடைகளையும் அகற்றப் போவதாக மேல் மாகாண ஆளுநர் எம். அசாத் எஸ். சாலி தெரிவித்தார். முன்கூட்டி அறிவித்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்க உள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நேற்று சந்தித்தார். அதனை தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரேமதாஸ கிரிக்கட் விளையாட்டரங்கிற்கு அருகிலுள்ள நடைபாதை கடை உரிமையாளர்களிற்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய இடங்களிலுள்ள நடைபாதை வியாபார நிறுவனங்களிற்கும் அறிவித்தல் வழங்கிய பின்னர் அவற்றை அகற்ற உள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்து உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களிற்கும் பிரதம செயலாளரினூடாக சுற்றறிக்கையொன்றை அனுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் பதவியேற்ற 30 நாட்களிற்குள், பொது மக்களிற்கு சிறப்பான பல சேவைகளை ஆற்ற முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆளுநருடனான சந்திப்பின் போது பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான வழிகள் பற்றியும், நாட்டின் பொதுவான அரசியல் நிலைமைகள் பற்றியும் கலந்துரையாடியதாக அமைச்சர் கருணாநாயக்க குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரும் ஊழலைப் பற்றி பேசுகிறார்கள். ஊழல் காணப்படும் இடங்களை இனங்கண்டு அவற்றை முழுமையாக இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் தற்போது ஈடுபடுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

யாராவது மின் இணைப்பிற்காக உரிய முறையில் விண்ணப்பிக்கும் போது அவர்களிற்குரிய இணைப்பினை எவ்வித தாமதமின்றி வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Tue, 02/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை