தேசிய அரசு அமைக்கும் யோசனை பாராளுமன்ற செயலாளரிடம் இன்று சமர்ப்பிப்பு

தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. இதற்கான யோசனையை இன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக சபை முதல்வரும் அரச தொழில் முயற்சி மலைநாட்டு அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐ.தே.க தேசிய முன்னணியானது நல்லாட்சியை விரும்பும் மற்றும் நல்லாட்சியின் கொள்கைகளுக்கு இணங்கும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு புதிய கூட்டாக தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை மீளச் செலுத்தி, நாட்டு மக்களுக்கு உச்சளவு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கவும் நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் விருப்பம் தெரிவிக்கும் அனைத்துக் கட்சிகளும் இந்த தேசிய அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய அரசாங்கத்துடன் இணையும் கட்சிகள் தேசிய அரசாங்கத்தை உருவாக்கும் யோசனை தொடர்பிலான வாக்கெடுப்பின் போது தமது ஆதரவை நிரூபிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அண்மைக்காலமாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஐ.தே.கவின் முக்கிய அமைச்சர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அபிவிருத்தி உட்பட நாட்டை துரிதமாக முன்னேற்றும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அமைச்சர்களின் பங்களிப்பு முக்கியமாகிறது.

அந்த வகையில் தேசிய அரசாங்கமொன்றை அமைத்து அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதேவேளை, தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் சாதகமாகவும் பாதகமாகவும் முன்வைக்கப் பட்டு வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் இது தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக ஐ.தே.க எம்.பி. முஜிபுர் ரஹ்மான் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இத்தகைய நிலையில் இன்றைய தினம் தேசிய அரசாங்கத்துக்கான யோசனையை ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கும்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 02/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை