சபாநாயகரின் விசேட குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்ப ஏற்பாடு

பாராளுமன்ற குழப்ப நிலை

பாராளுமன்றத்தில் தகாத முறையில் நடந்துகொண்டு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியவர்கள் தொடர்பில் பிரதி சபாநாயகர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை, சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. யாராவது பாராளுமன்ற சிறப்புரிமைச் சட்டத்தை மீறியிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கவுள்ளார்.  

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய பாராளுமன்ற சிறப்புரிமை பற்றிய குழு, இந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்புவது பற்றிய முடிவை எடுத்திருப்பதுடன், எதிர்வரும் வாரத்தில் இந்த அறிக்கை அனுப்பிவைக்கப்படும் என்றும் சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.  

கடந்த நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் தகாத முறையில் நடந்துகொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடந்த வௌ்ளிக்கிழமை கூடிய சிறப்புரிமைக் குழு பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரசன்ன ரணவீர, பத்ம உதயசாந்த ஆகியோர் பொலிஸாரைக் கடமையைச் செய்யவிடாது தடுத்தமை மற்றும் அவர்கள் மீது மிளகாய்தூள் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பாலித்த தெவரப்பெரும ஆகியோர் சபைக்குள் கத்தியுடன் நுழைந்து, அச்சுறுத்தியமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள் என்றும் சிறப்புரிமைக்குழு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான திலும் அமுனுகம மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோர் சபாநாயகரின் மேசையிலிருந்த ஒலிவாங்கி கட்டமைப்புக்கு 325,000 ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.  

அதேநேரம், இதுவரை எந்தவொரு அறிக்கையும் தனக்குக் கிடைக்கவில்லை யென சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்தார்.

அறிக்கை கிடைத்ததும் அதிலுள்ள சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   

Mon, 02/11/2019 - 09:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை