அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் சம்பியன்

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகக் கழகங்களுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் தலைமையில் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் (17) நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் ஜே.லியாகத்அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 32 கழகங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இதில் அரை இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்திற்கும் பாலமுனை அல் - அறபா விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் நடைபெற்ற போட்டியில் சோபர் கழக அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

மற்றைய அரை இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை எவடோப் விளையாட்டுக் கழகத்திற்கும் ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் நடைபெற்றது.இதில் ஒலுவில் இலவன் ஸ்டார் கழக அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

8 ஓவர் 11 பேர் என்ற அடிப்படையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சோபர் அணியினர் குறிப்பிட்ட ஓவர் நிறைவில் 7 விக்கெட் இழற்பிக்கு 71 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.பதிலுக்கு வெற்றி பெற துடுப்பெடுத்தாடிய ஒலுவில் இலவன் ஸ்டார் அணியினர் குறிப்பிட்ட ஓவர் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 66 ஓட்டங்களைப் பெற்று 5 ஓட்டத்தினால் தோல்வியடைந்து இரண்டாமிடத்தினைப் பெற்றுக் கொண்டனர்.

இறுதிப்போட்டியில் சோபர் அணியின் சாக்கீர் 20 ஓட்டத்தினைப் பெற்றதுடன் நியாஸ் 2 ஓவர் பந்து வீசி 8 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். இலவன் ஸ்டார் அணி சார்பாக சியான் 2 ஓவர் பந்து வீசி 4 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன் ரஸ்மி 19 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இவ்வாண்டுக்கான அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கதையும், இரண்டாமிடம் பெற்ற ஒலுவில் இலவன் ஸ்டார் அணியினர் வெள்ளிப்பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டனர்.

பிரதேச செயலகங்களுக்கிடையிலான அம்பாறை மாவட்ட மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகம் சார்பாக இக்கழக வீரர்கள் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் கிழக்கு தினகரன், அட்டாளைச்சேனை விசேட, பாலமுனை விசேட நிருபர்கள்

நமது நிருபர்கள்

Wed, 02/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை