சர்ச்சைக்குரிய கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறப்பு

தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான கிறிஸ்மஸ் தீவிலுள்ள கடல் கடந்த சர்ச்சைக்குரிய தடுப்பு முகாமை மீண்டும் திறக்கும் அறிவிப்பை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் வெளியிட்டுள்ளார்.

மொரிஸனின் அரசு பாராளுமன்றத்தில் வரலாற்றுத் தோல்வி ஒன்றை சந்தித்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடல் கடந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுகவீனமுற்ற அகதிகளுக்கு அவுஸ்திரேலியாவில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு அனுமதிக்கும் சட்ட மூலம் ஒன்று அரசில் இல்லாத எம்.பிக்களால் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 80 ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அரசு ஒன்று பாராளுமன்றத்தில் தோல்வியை சந்தித்த முதல் முறையாக இது இருந்தது. இது நாட்டின் கடுமையான எல்லை கொள்கைகளை பலவீனப்படுத்துவதோடு ஆட்கடத்தல்காரர்களை பலப்படுத்துவதாக மொரிஸன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சட்டம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறியே, தொலைதூர தடுப்பு முகாமை திறக்க ஒப்புதல் அளித்ததாக மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மேற்கு நகரான பேர்த்தில் இருந்து 2,300 கிலோமீற்றர் தொலையில் இருக்கும் கிறிஸ்மஸ் தீவு முகாம் ஒரு சில மாதங்களுக்கு முன்னரே மூடப்பட்டது. இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கடைசி 35 பேரும் கடந்த ஒக்டோபரில் வெளியேற்றப்பட்டனர்.

Thu, 02/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை