கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் அந்தந்த நாடுகளின் அதிகாரிகளிடமே இறுதி முடிவுகள்

தவறு செய்தவர்களை பரிமாற்றுவது தொடர்பில் ஏனைய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தாலும் அந்தந்த நாடுகளின் அதிகாரிகளே கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் இறுதி முடிவுகளை எடுப்பார்கள் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் இலங்கைக்கும் துபாய்க்கும் இடையில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் துபாயில் கைதுசெய்யப்பட்ட 25பேரை நாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பில் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தாலும் அந்த நாட்டு அதிகாரிகளே இறுதி முடிவு எடுப்பார்கள் என்றும் கூறினார்.

தவறாளர்களை ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் கட்டளைகள், கடன் இணக்க கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் தலதா அத்துகோரள இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடன் இணக்க சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், பிராந்திய ரதியில் ஐந்து கடன் இணக்க சபைகளை அமைப்பதற்கும் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்திருந்தோம். நுண்கடன் வழங்கல் தொடர்பில் நிதியமைச்சுடன் கலந்துரையாடி அதனைக் கட்டுப்படுத்த சட்டரீதியான ஒத்துழைப்பை வழங்க முடியும்.  இது தொடர்பான பிணக்குகளைத் தீர்ப்பதற்காக கடன் இணக்க சபைக்கு கொழும்புக்கு வரவேண்டும். பிரதேச ரீதியில் கடன் இணக்க சபைகளை அமைத்து, அவற்றுக்கு உறுப்பினர்களை நியமித்து கடன் தொடர்பான பிணக்குகளைத் தீர்த்துவைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நிதிபதி ஒருவரே இதன் தலைவராக இருப்பார் என்பதுடன் நீதித்துறையுடன் தொடர்புபட்ட நிபுணர்கள் உறுப்பினர்களாக இருப்பர். கடன் பெறுவதற்காக அடகுவைத்த சொத்துக்களை மீட்டுக் கொடுப்பதற்கு அல்லது பெற்றுக்கொண்ட கடனுக்கான வட்டியை பகுதி பகுதியாகப் பெற்றுக் கொடுப்பதற்குமே கடன் இணக்க சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கடன் இணக்க சபை தொடர்பில் பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களின் ஊடாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். குறிப்பாக கடன் இணக்க சபையின் சேவைகளை எங்கு பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்து மக்களுக்கு அறிவிக்கப்படும்.

அர்ஜுன மகேந்திரன்  நேற்றையதினம் (நேற்றுமுன்தினம்) கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக் குழுவின் தலைவர் மாக்கந்தர மதூஷ் உள்ளிட்ட 25பேரை நாட்டுக்குள் அழைத்துவருவது தொடர்பில் அந்தந்த நாடுகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என சிலர் வலியுறுத்தினர். சிங்கப்பூர் மற்றும் துபாயுடன் இது தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அதேபோல உதயங்க வீரதுங்க கைதுசெய்யப்பட்டு பல நாட்களாகியுள்ளபோதும் இதுவரை எம்மிடம் ஒப்படைப்பது தொடர்பில் அந்த நாடு எமக்கு எந்தவித அறிவிப்பையும் வழங்கவில்லை. எந்தவொரு நாட்டுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டாலும் இறுதி முடிவு அந்தந்த நாட்டு அதிகாரிகளாலேயே எடுக்கப்படும்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம்

பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டுள்ளபோதும் வெளிநாட்டுப் பிரஜைகள் பலர் இலங்கையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உயிருடன் இருக்கும்வரை வைத்திருக்க வேண்டியுள்ளது. அதற்கு எமது நாட்டில் வரிசெலுத்தும் மக்களின் பணத்தை செலவுசெய்யவேண்டியும் உள்ளது. அவர்களை அந்தந்த நாடுகளுக்கு திருப்பியனுப்பினால் அவர்களைப் பராமரிப்பதற்கான செலவை குறைக்க முடியும். இலங்கையில் தண்டனை வழங்கப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் தொடர்பில் கொழும்பிலுள்ள உயர் ஸ்தானிகராலயம் மற்றும் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளுக்குக் கூடத் தெரியாதுள்ளது.

அவ்வாறானவர்கள் தொடர்பில் அந்தந்த நாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான வெளிநாட்டுப் பிரஜைகள் ஆகக் குறைந்தது ஆறு மாத காலம் இங்கு தண்டனையை அனுபவித்துவிட்டு அந்தந்த நாடுகளில் எஞ்சிய காலத்தை அனுபவிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

அதேநேரம், போதைப்பொருள் தொடர்பில் சிறைத் தண்டனை அனுபவித்துவரம் பெண் சிறைக்கைதிகளின் நிலைமை மோசமாகவுள்ளது. பெரும்பாலானவர்கள் போதைப்பொருள் கடத்துகின்றோம் என்பது கூடத் தெரியாமல் சிக்கிக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு குழந்தைகள் குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் தொடர்பில் மனித நேயத்துடன் நோக்க வேண்டும்.

அநுர பிரியதர்ஷன யாப்பா

வங்கி ஊடாக அன்றி கடன்கள் பெறப்படும்போதே பிணக்குகள் ஏற்படுகின்றன. அவ்வாறான பிணக்குகளைத் தீர்ப்பதற்கே கடன் இணக்க சபைகள் அவசியமாகின்றன. சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் அழைத்து இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு கடன் இணக்கசபை உள்ளது.

கடன் இணக்க சபைகள் மாவட்ட ரீதியில் அமைக்கப்படவேண்டும்.

அவ்வாறு அமைக்கப்படும்போதே பிரதேசங்களில் உள்ளவர்கள் கொழும்புக்குப் பயணிக்க வேண்டிய தேவை இல்லை. கடன் தொடர்பில் நிலையான சட்டங்கள் இல்லாமையே பிணக்குகள் ஏற்படக் காரணமாகின்றன. பிரதேசங்களில் நாள் வட்டிக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன.

நாட்டில் உள்ள அனைவரும் கடன்பெற்றவர்களாக இருக்கின்றனர். கடன் பெறாதவர்கள் என்று எவரும் இல்லை.

நாடும் நாட்டில் உள்ளவர்களும் கடனாளிகளாகவிருக்கின்றனர். கிராம மட்டங்களில் விலை அதிகரிப்பே கடன் பெறுவதற்கான தேவையின் அதிகமாகியுள்ளது.

சந்திரசிறி கஜதீர (ஐ.ம.சு.மு)

நாட்டில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான யோசனைகளை இந்த வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக அரசாங்கம் முன்வைக்கும் என எதிர்பார்க்கின்றோம். மக்களுக்கு காணப்படும் கஷ்டமான நிலைமையே போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் வியாபாரத்துக்குள் சிக்கிக் கொள்வதற்கான காரணமாகிறது.

மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க நுண்கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெறும் நிலைமைகள் காணப்படுகின்றன.

இவ்வாறான கடன்களால் இருந்த சொத்துக்களையும் இழந்தவர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களை இந்தக் கடன் பொறியிலிருந்து மீட்பதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும். இதற்கு வறுமையிலிருந்து மக்களை மீட்பது அவசியமாகும்.

எமக்கும், எமது நாட்டுக்கும் பொருத்தமான பொருளாதார முறையைத் தெரிவுசெய்து அதற்கமைய செயற்பாடுகளை முன்னெடுத்தால் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடியும்.

ஒரு சிலர் மாத்திரம் பணம் படைத்தவர்களாகவும் ஏனையவர்கள் வறுமையில் இருப்பதற்கும் வழிவகிக்கும் வகையில் பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால் மக்களுக்கிடையிலான வேறுபாடுகள் மேலும் அதிகரித்துச் செல்லும்.

Thu, 02/07/2019 - 08:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை