சவூதிக்கு அணு ஆயுதத்தை வழங்க அமெரிக்கா முயற்சி

கொங்கிரஸ் அறிக்கையில் தகவல்

சவூதி அரேபியாவுக்கு அமெரிக்கா அணு ஆயுத தொழில்நுட்பத்தை வழங்க அவசரம் காட்டுவதாக அமெரிக்க கொங்கிரஸின் ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சவூதி பகுதியில் அணு உலைகளை அமைக்க வெள்ளை மாளிகை திட்டமிட்டு வருவது குறித்து ஜனநாயக கட்சி பெரும்பான்மையாக உள்ள அவை விசாரணையை ஆரம்பித்துள்ளது. மத்திய கிழக்கில் அணு ஆயுதங்கள் பெருக்குவது அந்தப் பகுதியை முழுக்க சீர்குலைக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

சில நாட்கள் முன்னர் சவூதி தலைநகர் ரியாத்திலிருந்து 230 கி.மீ. தூரத்தில் உள்ள அல்தவாத்மி என்னும் நகரில் ஏவுகணை தயாரிப்பு சோதனை மையம் இருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்களுடன் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அமெரிக்க கொங்கிரஸ் வெளியிட்டிருக்கும் தகவலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு, நாட்டின் தொழில்நுட்ப இடமாற்றங்களுக்கு எதிரான தடுப்புச் சட்டத்தை மீறி, ஆணு ஆயுத தொழில்நுட்பத்தை சவூதிக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க கொங்கிரஸின் கருத்தை புறக்கணித்துவிட்டு இந்தத் திட்டத்தை நிறைவேற்ற டிரம்ப் அரசு அவசரம் காட்டி வருவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சவூதியிடம் இந்தத் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டால் அணு ஆயுதங்களை தயாரிக்க நேரிடும். இது மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் பகையுணர்வை அதிகரிக்கும். மத்திய கிழக்கு நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும்” என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை மாளிகையில் உயர்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் சிலருக்கே இதில் விருப்பம் இல்லை என்பதால் இந்த தொழில்நுட்ப இடமாற்ற செய்தியை கசியவிட்டுள்ளனர். யெமன் போர், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை என சவூதி இளவரசர் சல்மான் செயல்பாடுகள் மீது உலக நாடுகள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் அமெரிக்க அரசு அணு ஆயுத தொழிநுட்பத்தை வழங்க அவசரம் காட்டுவது ஆபத்தானது என அமெரிக்க பத்திரிகையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Thu, 02/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை