ஜனாதிபதி யாரென்பதை நாமே தீர்மானிப்போம்!

'ஜனாதிபதி யார் என்பதை நாமே தீர்மானிப்போம்' என்கிறார் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.

கேள்வி: -துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்திற்கான கடல் பிரதேசத்தை மூடும் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. அதன் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் உங்களால் என்ன கூற முடியும்?

பதில்: - துறைமுக நகரம் என்ற கருத்து முதலில் உள்ளடங்கப்பட்டிருந்தது 1998ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கொழும்பு நகர செயல் திட்டத்திலாகும். அப்போதைய திட்டமாக இருந்தது தற்போதைய துறைமுக அதிகார சபைக்குரிய ரெஜன இறங்கு துறையினை கொழும்பு தெற்கு துறைமுகத்திற்கு எடுத்துச் சென்று துறைமுகத்திற்குள்ளேயே நகர் ஒன்றை உருவாக்குவதேயாகும். அதாவது இருக்கும் நிலப்பரப்பிலேயே நகர் ஒன்றை உருவாக்குவதேயாகும். அதற்குப் பின்னர் 2002ம் ஆண்டில் 'யலி புபுதும ஸ்ரீலங்கா' என்ற வேலைத் திட்டத்தில் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து மேல் மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு பாரிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் போது அவர்கள் பரிந்துரை செய்தது கொழும்பு தெற்கு துறைமுகத்திற்கு கீழால் இந்த நகரை அமைப்பதற்காகும். அதற்கு விஞ்ஞான ரீதியான காரணம் ஒன்றிருந்தது. அதாவது கடலுக்குக் கீழாக மணல் திட்டு தெற்கிலிருந்து வடக்கிற்குத் தள்ளப்படுவதாகும். இதனால் தெற்கு துறைமுகத்தில் இடைவெளியொன்றை ஏற்படுத்தும் போது தானாகவே மணல் ஒன்று சேர்வதால் அப்பிரதேசம் ஆழமற்ற கடலாக ஆகும் என நினைத்து அந்த யோசனை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் 2011ம் ஆண்டளவில் தெற்கு துறைமுகத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான இடைவெளி உருவாக்கப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடனேயே இது மேற்கொள்ளப்பட்டது. தெற்குத் துறைமுகத்தின் தெற்கு இறங்குதுறையினை நிர்மாணிப்பதற்கு சீன நிறுவனம் ஒன்று வந்தது. அதன் பின்னர் துறைமுக நகருக்கான பழைய திட்டத்தை அவர்கள் கண்டுதான் 2014ம் ஆண்டில் அதற்கான யோசனை ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அந்நேரம் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆயத்தமாகியிருந்ததால் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அவசர அவசரமாக இத்திட்டத்தை அரம்பித்தது.

கேள்வி: - அவசர அவசரமாக ஆரம்பிக்கப்பட்டதால் இலங்கைக்கு பாதகமான பண்புகள் அதில் உள்ளடங்கியிருந்ததா?

பதில்: - ஆம். இத்திட்டம் தொடர்பில் சாத்தியக்கூற்று ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. சுற்றாடல் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. காணியை உரிமையாக்கிக் கொடுப்பதற்கான முயற்சியே இருந்தது. இதனை துறைமுக அதிகார சபையே ஏற்பாடு செய்தது. அதே போன்று இந்த நிலப்பரப்பு சீனாவுக்குச் சொந்தமான இறையாண்மை நிலம் என்பதாக பிரச்சினை எழுந்தது. இதனால் சுற்றாடலியலாளர்கள், கடற்றொழிலாளர்கள் பாரிய எதிர்ப்புக்களை ஆரம்பித்தனர். இது தனியான தீவாக மாறி கசினோ விளையாடும், விபசார விடுதிகள் நடத்தப்படும் களியாட்ட தீவாக மாறும் என்ற அச்சம் சமூகத்திற்கு இருந்தது. எவ்வாறாயினும் 2015ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆட்சியின் பின்னர் இதன் வேலைத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் இதனைப் பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்காக அஜித த கொஸ்தாவின் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அவர் தனது அறிக்கையில் பல பரிந்துரைகளை வழங்கினார். அதனடிப்படையில் இதன் பணிகள் நிறுத்தப்பட்டன. சீன நிறுவனம் அப்போது துறைமுக நகரின் வேலைகளை ஆரம்பித்திருந்தது. அதன் பின்னர் இது இராஜதந்திர பிரச்சினையாகவும் மாறியது. இறுதியில் முன்னர் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது. ஒழுங்கு முறையிலான சுற்றாடல் ஆய்வுகளைச் செய்வதற்கும், காணி உரிமையினை வழங்குவதை நிறுத்துவதற்கும், கசினோ சூதாட்டம் மற்றும் களியாட்டச் செயற்பாடுகளையோ இங்கு அமைக்காதிருக்கவும், நிதி நகரமாக இந்தப் பூமிமையப் பயன்படுத்துவதற்கும் சீன நிறுவனம் இணங்கியது. இதனடிப்படையில் மீண்டும் இந்தத் திட்டத்தை 2016ம் ஆண்டு நாம் ஆரம்பித்தோம்.

கேள்வி: - அடுத்ததாக துறைமுக நகரில் மேற்கொள்ளப்பட உள்ள வேலைத் திட்டங்கள் என்ன என்பது பற்றி கூற முடியுமா?

பதில்: - இதற்கடுத்து இங்கு கால்வாய் ஒன்று நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் உள்ளன. இங்கு மத்திய பூங்கா அமைப்பதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். அதேபோன்று இங்கு 74காணிப் பிரிவுகள் உள்ளன. இதன் நான்கு பகுதிகள்ஆரம்பமாக இந்த வருடத்தில் முதலீட்டிற்காகத் திறக்கப்படும். இதில் ஒன்று சீன நிறுவனத்திற்குரியது. அதில் நாம் நிதிச் சோலை ஒன்றை உருவாக்க எதிர்பார்க்கின்றோம். அது 60மாடிகளைக் கொண்ட மூன்று கட்டடங்களாகும். உலகிலேயே இருக்கும் சர்வதேச வங்கி, நிதி நிறுவனத்தை நிர்மாணிப்பதற்கு பிரித்தானியா, ஜேர்மன், அமெரிக்கா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், ஹொங்கோங், தாய்வான் உள்ளிட்ட அனேக நாடுகளை முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுப்போம். இலங்கை அரசுக்குச் சொந்தமான மூன்று பகுதிகளில் நாம் ஆரம்பிப்போம். சர்வதேச பாடசாலை ஒன்று, வைத்தியசாலை, சர்வதேச தரத்துடன் கூடிய மாநாட்டு மண்டபம் இங்கு அமைக்கப்படும். இந்த வேலைத் திட்டம் 2040ம் ஆண்டு வரையில் செயற்படுத்தப்படும். இதற்குத் தேவையான மின்சாரம், நீர் விநியோகம் மற்றும் கழிவு முகாமைத்துவம் போன்ற விடயங்களுக்காக புதிய சட்ட விதிகளை அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கின்றோம். இந்தக் காணிகள் எமது அரசுக்குச் சொந்தமான, காணி ஆணையாளருக்குச் சொந்தமானவை என வர்த்தமானியில் அறிவிப்போம். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. ஜனாதிபதிதான் இந்தக் காணிகளுக்கான பொறுப்பாளர். ஜனாதிபதி இந்தக் காணியினை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றுவார். நகர அபிவிருத்தி அதிகார சபை இதனை விஷேட நகர அபிவிருத்தி வலயமாக பெயரிடும். பொது நிர்வாக அமைச்சினால் இந்தக் காணிகள் கொழும்பு மாவட்டச் செயலகத்திற்குரிய காணியாக, இலங்கைக்குரியதாக பெயரிடும். வரும் காலத்தில் இலகு புகையிரத கட்டமைப்பும் இங்கு அமைக்கப்படும். அதிவேக வீதிக் கட்டமைப்புடன் இந்த நிலப்பரப்பு இணைக்கப்படும்.

கேள்வி: - தெஹிவளை - கல்கிசை நகரங்களை மையப்படுத்தி மற்றொரு சமுத்திர நகரை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றதே...

பதில்: - ஆம். எம்மிடம் இரண்டு சமுத்திர நகர் திட்டங்கள் உள்ளன. அவை இரண்டும் எதிர்காலத்திற்கு உரியவையாகும். கொள்ளுப்பிட்டியிலிருந்து தெஹிவளை - கல்கிசை வரையிலான பகுதி மிகுந்த மக்கள் நடமாட்டம் உள்ள பிரதேசமாகி விட்டது. அதனை இனி விரிவாக்குவது சிரமம். எனவே காலிமுகத்திடலுடன் கடற்கரையினை அப்பால் கொண்டு செல்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இதனோடு தொடர்புடைய சாத்தியக்கூற்று ஆய்வு நடவடிக்கைகள் இப்போது நாரா நிறுவனத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. அதே போன்று இதனோடு இணைந்து சுற்றாடல் ஆய்வுகளும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இந்த சாத்தியக்கூற்று ஆய்வின் போது இது வெற்றிகரமானது எனத் தீர்மானிக்கப்பட்டால் இதன் நிர்மாணப் பணிகளை இவ்வருடத்திலேயே ஆரம்பிப்போம்.

கேள்வி: - இதன் நிர்மாணப் பணிகளைச் செய்வது இலங்கையின் பொறியியலாளர்களா? அல்லது வெளிநாட்டு பொறியியலாளர்களா?

பதில்: - எமக்கு ஏராளமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. எனவே சமுத்திர நகருக்கு காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தை இணைத்துக் கொள்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். களனி ஆற்றைச் சுற்றியுள்ள கிம்புலா எல பிரதேச மக்களுக்கு ஒழுங்கான வீடுகளைப் பெற்றுக் கொடுத்து ப்ளுமெண்டல் குப்பை மேடு உள்ள பிரதேசத்திற்கும் அபிவிருத்தி திட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்கும் எம்மிடம் திட்டங்கள் உள்ளன. துறைமுக நகரினால் 200வருடங்கள் ஆற்றிலிருந்து கடலுக்குச் சென்ற மணலை நாம் மீண்டும் இலங்கைக்கு பெற்றுக் கொண்டோம். இதனைச் சரியாகச் செய்து கொண்டால் கடல் அரிப்பைத் தடுத்து புதிய கடற்கரையினை உருவாக்குவதற்காக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

கேள்வி: - தொழில்நுட்ப நகரத் திட்டம் தொடர்பிலான உங்கள் கருத்து என்ன?

பதில்: - இங்கு இரண்டு கருத்துக்கள் இருக்கின்றனன. முதலாவது பொருளாதார மூலோபாய வழியாகும். 1977ம் ஆண்டுக்கு முன்னர் நாம் உணவின் மூலமும் கைத்தொழிலின் மூலமும் நாட்டை தன்னிறைவு அடையச் செய்யவே முயன்றோம். இது இறக்குமதி பதிலீட்டுப் பொருளாதாரம் என அறியப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியதும் இறக்குமதி பொருளாதாரத்தை உருவாக்க முயன்றார். ஏற்றுமதி வலயங்கள் வந்தது இதனடிப்படையிலாகும். ஏற்றுமதி பதிலீட்டினால் நாம் சில வெற்றிகளை அடைந்து கொண்டோம். 1960ம் ஆண்டுகளில் நாட்டின் அரிசித் தேவையின் பெருமளவு வெளிநாட்டிலிருந்தே கொண்டு வரப்பட்டது. இப்போது அவ்வாறான தேவை இல்லை. 2010ம் ஆண்டிலிருந்து இலங்கை அரிசியில் தன்னிறைவு அடைந்தது. ஏற்றுமதி வலயங்களிலிருந்து நாம் பாரிய வெற்றிகளை அடைந்தது உண்மையே. எனினும் அந்த சாதகங்கள் இப்போது எம்மை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றன. பங்களாதேஷ் எம்மை விட ஆடை உற்பத்தியினை நன்றாகச் செய்து கொண்டு செல்கின்றது. இப்போது எமக்கு இலாப வழிகள் இல்லை. இப்போது எமது மூலோபயமாக இருக்க வேண்டியது என்ன? எம்மிடம் படிப்பறிவு, சிறந்த ஆற்றல், கற்றுத் தேர்ந்த மக்கள் உள்ளார்கள். இதனை எமது நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனைத்தான் நான் அடிக்கடி கூறுவது 'இரண்டு கோடி வயிற்றைப் பற்றியல்ல, இரண்டு கோடி மூளைகளைப் பற்றி சிந்தியுங்கள்' என்று.எனக்குத் தெரிந்த வகையில் முதலாவது கைத்தொழில் புரட்சியின் போது இயந்திரமயமாதல் ஏற்பட்டது. இரண்டாவது கைத்தொழில் புரட்சியின் போது எரிபொருள், நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது. மூன்றாவர் கைத்தொழில் புரட்சியின் போது கணினி உருவாக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பம் பலமடைந்தது. நான்காவது கைத்தொழில் புரட்சியின் போது நனோ தொழில்நுட்பம், மரபணு தொழில்நுட்பம், உணவுத் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம்,பசுமை தொழில்நுட்பம் போன்ற பல்வேறு ஆயிரக்கணக்கான தொழில்நுட்பங்கள் புத்தாங்கள் ஊடாக ஏற்பட்டன. எமது நாட்டைச் சுற்றியுள்ள தாய்வான், தென்கொரியா போன்ற நாடுகள் விரைவாகவே முன்னேற்றம் கண்டன. இன்று உலகில் மிகப் பெரிய நிறுவனங்களாக பேஸ் புக், கூகுல், அமேசன் போன்ற நிறுவனங்கள் உள்ளன. இவை உருவாக்குனர்களின் உருவாக்கங்களால் உருவாக்கப்பட்டவையாகும்.

கேள்வி: - கடுவலையிலிருந்து கொழும்பு செல்லும் இலகு புகையிரதத் திட்ட நடவடிக்கைகளின் தற்போதைய நிலை எவ்வாறுள்ளன?

பதில்: - அது புகையிரத வீதியை அமைப்பது போன்ற ஒன்று அல்ல. புதிய புகையிரத கட்டமைப்பொன்றே ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான புகையிரதத்தை புகையிரதங்களை நிறுத்தி வைக்கும் இடங்களை நிர்மாணிக்க வேண்டும். புதிய புகையிரத சேவையே இங்கு நடக்கப் போகின்றது. இதற்கான சாத்தியக் கூற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிந்திருக்கின்றது.

கேள்வி: - ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிரும் அபேட்சகர்களுள் உங்களது பெயரும் கூறப்படுகின்றதே? என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: - இந்நாட்டின் ஜனாதிபதித் தேர்தலுக்குரிய அபேட்சகர்கள் பிரதான இரண்டு கட்சிகளின் அரசியல் பின்புலத்திலிருந்தே வர வேண்டும். அப்போதுதான் 50வீத வாக்கைப் பெற முடியும். ஆனால் 2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது நாமும், ஜே.வி.பியுமே என்பதை நான் தெளிவாகவே கூறுவேன். 2015ம் ஆண்டில் தோற்கடிக்க முடியாது எனக் கூறப்பட்ட மஹிந்தவை நாம் தோற்கடித்தோம். எனினும் வரும்காலங்களில் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதைத் தீர்மானிப்பதும் நாமே. நாம் போராட்டங்களினால் உருவானவர்கள்.

(காமினிபண்டாரநாயக்கா)

தமிழில்: எம்.எஸ்.முஸப்பிர்

(புத்தளம் விஷேட நிருபர்)

Thu, 02/21/2019 - 12:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை