சப்ரகமுவ மாகாண சபையின் விளையாட்டு மைதானம் விரைவில் திறப்பு

இரத்தினபுரி புதிய நகரில் நவீன முறையில் அமைக்கப்பட்டுவரும் சப்ரகமுவ மாகாண சபைக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் விரைவில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தெரிவித்தார்.

இரத்தினபுரி புதிய நகரில் நவீன முறையில் அமைக்கப்பட்டுவரும் சப்ரகமுவ மாகாண சபையின் விளையாட்டு மைதானத்தை கடந்த செவ்வாய்க்கிழமை (29) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அதன் அபிவிருத்திப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் மேற்படி மைதானத்தில் உல்லக விளையாட்டரங்கு, நீச்சல் தடாகம், உணவகம் உட்பட சகல வளங்களையும் கொண்டு நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதன் அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாண ஆளுநர், சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் மேற்படி மைதானத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. கூடிய விரைவில் இவ்மைதானம் பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இரண்டாவது கட்டமாக 400 மீற்றர் ஓடு மைதானம் உள்ளடக்கிய மைதானம் ஒன்றும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் ஆரம்பகட்ட பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

இதன்போது சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் டி.எம்.மாலணி, ஆளுநர் அலுவலகத்தின் செயலாளர் ஹேரத் பி.குலரத்ன, மாகாண அரசேவை ஆணைக்குழுவின் செயலாளர் சுநேத்ரா குணவர்தன, மாகாண விளையாட்டத்துறை அமைச்சின் செயலாளர் சாமர பமுனஆராச்சி உட்பட மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

காவத்தை தினகரன் விசேட நிருபர்

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை