தேசிய அரசாங்கப் பிரேரணை; பாராளுமன்றில் இன்று விவாதம்

எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணையை இன்று (07) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்க ஆளும் கட்சி தீர்மானித்துள்ளது.

இவ்விவாதத்தை நடத்துவது தொடர்பில் நேற்று மாலை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது. அரசாங்கத்தின் இந்தப் பிரேரணைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இருந்தபோதும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை ஒத்திவைத்துவிட்டு தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படுமென ஆளும் கட்சியினர், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.அரசாங்கத்தின் இந்த யோசனைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐ.ம.சு.மு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் ஈ.பி.டி.பி போன்ற கட்சிகள் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலரும் தமது எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், அரசாங்கத்தின் இந்த யோசனைக்கு தாம் ஆதரவு வழங்கப் போவதில்லையென்றும் கூறியுள்ளனர்.

எனினும், திட்டமிட்டபடி தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுமென ஆளும் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது. தேசிய அரசாங்கத்தை அமைத்து அமைச்சரவையின் எண்ணிக்கையை முப்பதிலிருந்து 48ஆக அதிகரிப்பதற்கும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுக்களின் எண்ணிக்கையை 40 இல் இருந்து 45 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

 

Thu, 02/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை