றோயல் - தோமியன் அணிகள் பலப்பரீட்சை

இலங்கையின் மிகப் பழமைவாய்ந்த பாடசாலை கிரிக்கெட் பெரும் போட்டியான “நீலங்களின் சமர்” இந்த ஆண்டு 140ஆவது முறையாக மார்ச் மாதம் 07ஆம், 08ஆம், 09ஆம் திகதிகளில் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கிரிக்கெட்டின் பித்துக்காலம் என அழைக்கப்படும் மார்ச் மாதத்தை அலங்கரிக்கும் மிக முக்கிய பெரும் போட்டியான நீலங்களின் சமர், இலங்கையின் பிரபல்யமிக்க பாடசாலைகளான கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் தோமியன் கல்லூரிகள் இடையில், டி.எஸ். சேனநாயக்க நினைவுக்கிண்ணத்திற்காக வருடம்தோறும் இடம்பெற்று வருகின்றது.

140ஆவது முறையாக இடம்பெறும் இந்த நீலங்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி, உலகின் இரண்டாவது பழமைமிக்க கிரிக்கெட் தொடராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. நீலங்களின் சமரை விட பழமைமிக்கதாக கருதப்படும் அவுஸ்திரேலியாவின் புனித பேதுரு கல்லூரி மற்றும் பிரின்ஸ் கல்லூரி இடையிலான பெரும் கிரிக்கெட் போட்டி, நீலங்களின் சமர் ஆரம்பிக்கப்பட ஒரு வருடத்திற்கு முன்னரே தொடங்கியிருந்தது.

நீலங்களின் சமர் பெரும் போட்டி முதற்தடவையாக 1880ஆம் ஆண்டு காலி முகத்திடத்திடலில் கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் தோமியன் கல்லூரிகள் இடையில் விளையாடப்பட்டிருந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க கிரிக்கெட் பெரும் போட்டி விளையாடப்பட்ட இடத்திலேயே தற்போது கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டல் அமைந்திருக்கின்றது.

இந்த ஆண்டுக்கான நீலங்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி பற்றி விபரிக்கும் ஊடகவியாலளர் சந்திப்பு கடந்த புதன்கிழமை (20) கொழும்பு பண்டாரநாயக்க நினைவு அரங்கில் இடம்பெற்றிருந்தது. இந்த ஊடகவியாலளர் சந்திப்பில் கொழும்பு றோயல் கல்லூரி அதிபர் அபேயரத்ன, புனித தோமியன் கல்லூரி அதிபர் அருட்தந்தை மார்க் பில்லிமோரியா மற்றும் போட்டித் தொடருக்கான பிரதான அனுசரணையாளர்களான டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் குழு அதிகாரி திருமதி அமலி நாணயக்கார மற்றும் ஏனைய அனுசரணையாளர்கள், பாடசாலை கிரிக்கெட் அணி வீரர்கள், ஆசிரியர்கள், சிரேஷ்ட ஊடகவியாலளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டயலொக் ஆசியாட்டா நிறுவனம் இந்த கிரிக்கெட் பெரும் போட்டியில் பெறப்படுகின்ற ஒவ்வொரு ஓட்டங்களுக்கும் ரூபா. 1,000 பணத்தையும், ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ரூபா. 10,000 பணத்தையும் வழங்குகின்றது. இந்த கிரிக்கெட் பெரும் போட்டி மூலம் சேகரிக்கப்படும் பணம் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடந்த ஆண்டு இந்த கிரிக்கெட் பெரும் போட்டியின் போது ரூபா. 1,018,000 சேகரிக்கப்பட்டிருந்தது.

இந்த கிரிக்கெட் பெரும் போட்டியின் மூலம் சேகரிக்கப்பட்டிருந்த பணம் மூலம் ரூபா. 3,977,000 வரை பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்கள் கடந்த ஆண்டுகளில் தேவையுடைய 14 பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Sat, 02/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை