மரணம் அல்லது சரணடைய ஐ.எஸ் உறுப்பினர்களுக்கு கடைசி தேர்வு

சிரியாவின் குறுகிய நிலப்பகுதியில் தனது கடைசி நிலையை தக்கவைத்துக்கொண்டிருக்கும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவினர் சரணடையாவிட்டால் மோதலில் கொல்லப்படுவார்கள் என்று அவர்களுக்கு எதிராக சண்டையிட்டு வரும் குர்திஷ் தலைமையிலான படை எச்சரித்துள்ளது.

ஐ.எஸ் கட்டுப்பாட்டில் எஞ்சி இருக்கும் அரை சதுர கிலோமீற்றர் நிலப்பகுதியில் சிக்கி இருக்கும் சிவிலியன்களை வெளியேற்றுவதற்கு முயற்சித்து வருவதாக அமெரிக்க ஆதரவிலான சிரிய ஜனநாயக படை குறிப்பிட்டுள்ளது.

“பொதுமக்களை வெளியேற்றுவதற்கு நாம் செயற்பட்டு வருகிறோம் பின்னர் நாம் தாக்குதல் நடத்தவுள்ளோம். இது விரைவில் இடம்பெறும்” என்று சிரிய ஜனநாயக படையின் பேச்சாளர் முஸ்தபா பாலி குறிப்பிட்டுள்ளார். எனினும் படை நடவடிக்கை குறித்த மேலதிக தகவல்களை வெளியிட அவர் மறுத்துள்ளார்.

“ஐ.எஸ் போராளிகளுக்கு இரண்டு தேர்வுகளே எஞ்சியுள்ளன, அவர்கள் சரணடைய வேண்டும் அல்லது மோதலில் அவர்கள் கொல்லப்படுவார்கள்” என்று குறிப்பிட்டார்.

2014 இல் சிரியா மற்றும் ஈராக்கின் கணிசமான நிலப்பகுதியை கைப்பற்றிய ஐ.எஸ் சுயமாக கலீபத் பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. அதன் கட்டுப்பாட்டு பகுதி பிரிட்டன் நாட்டின் அளவு பரந்திருந்தபோதும் ஈராக் எல்லையை ஒட்டிய பங்கூஸ் கிராமத்தின் சிறு பகுதி ஒன்றே தற்போது ஐ.எஸ் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ளது.

இந்நிலையில் ஐ.எஸ் பகுதியில் சிக்கி இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 200 குடும்பங்கள் பற்றி ஐ.நா நேற்று கவலையை வெளியிட்டிருந்தது. “பெறும்பாலானவர்கள் வெளியேறுவதை ஐ.எஸ் வேண்டுமென்று தடுத்து வருகிறது” ஐ.நா வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.’

எனினும் பங்கூஸ் கிராம முன்னரங்கு பகுதிகளில் கடந்த திங்கள் மாலையிலும் அமைதி நீடித்தது. ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து அண்மைய வாரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியபோதும் கடந்த மூன்று தினங்களில் எவரும் வெளியேறவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Wed, 02/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை