பிரதமரின் கருத்தை ஆழமாக ஆராய்ந்து அடுத்த நகர்வுக்கு செல்வதே சிறந்தது

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் முடிந் துள்ள நிலையில் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பும் குற்றமிழைத்துள்ளதாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க முதன்முதலாகக் கூறியிருப்பது குறித்து நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

"குற்ற உணர்விலா? அல்லது இனிவரும் நெருக்கடியிலிருந்து தப்ப முடியாது என்பதால் இதைக் கூறினாரா? என்பதை ஆராய வேண்டும்." எனத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவில் போர்க் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை  என்ற பிரதமரின் கருத்து

பெரும் தவறு.உண்மையை ஏற்காதவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப் பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட இளைஞர் அணி மாநாடு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் பிருந்தாகரன் தலைமையில் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். 

பிரதமரின் உரை தற்போது பேசு பொருளாக உள்ளது. யுத்தத்தில் நடந்த சிலவற்றை தொட்டுக்காட்டி இரு பகுதியும் குற்றமிழைத்தனர். இலங்கையில் சர்வதேச போர் குற்றங்கள் இடம்பெற்றன. குறிப்பாக இறுதிக் கட்டத்தில் அதிகம் இடம்பெற்றது இதனை யாரும் மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது. அதேநேரம் அரச தலைவர்கள் இதுவரை மகிந்தவும் வாய் தடுமாறியோ என்னவோ கூறினார் படையினரும் போர் குற்றம் இழைத்தனர். என்றார். தற்போதுதான் பிரதமர் முதல் தடவையாக 10 வருடம் கழித்து இரு தரப்பும் குற்றம் இழைத்ததாகக் கூறியுள்ளார்.

எந்தப் பின்னணியில் பிரதமர் இதைக் கூறியுள்ளார் என்பதையும் ஆராய வேண்டும். போரின் இறுதிக் கட்டத்தில் போர் குற்றத்தை விசாரிக்க வேண்டும் என தீர்மானம் வந்த நிலையில் ஒரு வருடத்தில் இலங்கையை பாராட்டி ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 10 ஆண்டு கடந்த நிலையில் பிரதமர் முதன் முதலாக இரு தரப்புமே போர் குற்றம் புரிந்தனர் என்பதனை ஏற்கும் நிலமை எதனால் வந்தது என்பதைப் பார்க்க வேண்டும்.  

யுத்தத்தின்போது இடம்பெற்ற பல விடயங்கள் வெளியில் எடுத்துச் செல்லப்பட்டு புலம்பெயர் அமைப்புக்களால் ஆதாரமாக அது முன் வைக்கப்பட்டது. அதில் ஒரு வீடியோ வெளியிட்ட நிகழ்வில் நானும் இருந்தேன். அதனைப் பார்த்த சர்வதேசப் பிரதிநிதிகளால் சில நிமிடம் பேச முடியவில்லை. இந்த நேரத்தில் இலங்கை அதிகாரி அங்கிருந்து மெதுவாக வெளியேறினார். அப்போதே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவர அமெரிக்கா முன் வந்தது. இரு தடவை கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியும் இலங்கை கண்டுகொள்ளாத நிலைநிலேயே முதலாவது சர்வதே விசாரணை 2014 ஆம் ஆண்டு நடைபெற்றது.   

பின்னர் நிபுணர்குழு அறிக்கை வெளியிடப்பட்டது. இன்று தமிழ்த் தரப்புக்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும்போது இவ்விரு அறிக்கையையே மேற்கோள் காட்டுகின்றன. இதற்குக் காரணம் போரில் ஈடுபடாத சுயாதீனமான தரப்பின் அறிக்கைகளே. இதனாலேயே இதனை வலியுறுத்துகின்றோம். இந்த அறிக்கையில் சர்வதேச அறிக்கை வேண்டும் என்பவர்களுக்கே அதில் என்ன உண்டு என்று தெரியாது.

அதில் இலங்கை அரசு சர்வதேச குற்றங்களை இழைத்தார்கள் என்பதற்கு தேவைக்கும் அதிகமான சாட்சிகள் உண்டு எனவும், போரில் ஈடுபட்ட புலிகளும் குற்றமிழைத்தனர் எனவும் இதில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே நாம் சர்வதேச குற்றவியல் விசாரணையை கோருகின்றோம். 

இதே இரண்டையும் நான் கூறினால் புலிகள் குற்றமிழைத்ததாக அறிக்கைகளில் உண்டு என மட்டுமே நாளைய செய்தியாக இருக்கும் . யுத்தக் குற்றம் இழைக்காமல் போர் இடம்பெறவில்லை. போரில் ஒரு தரப்பு மட்டும் குற்றம் இழைப்பதில்லை. போர் என்றாலே கொடூரமானது. மனித நேயத்திற்கு எதிரானது. மனித நேயம் என்பது உயிரோடு உள்ளவருக்கு உரித்தானது. போரில் வெற்றி என்பது கடினமானது. போரில் 10 ஆண்டுகளாக வெற்றி என்கின்றனர். இன்றும் உள்ள நிலைமை இதற்கு எடுத்து காட்டு.. 

யார் சரி என்பதை போர் தீர்மானிப்பதில்லை. யார் மிஞ்சி இருக்கின்றனர் என்பதனையே தீர்மானிக்கும் என்பதே உண்மை. தமிழ் அரசுக் கட்சி எந்த நிலைப்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது.  

இந்த நாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் ஒரே மக்கள் அல்ல. இந்த நாட்டில் சிங்கள தேசம் மட்டுமில்லை. சிங்களம் அல்லாத ஒரு தேசமும் இந் நாட்டில் உண்டு. அதுதான் தமிழ் தேசம் என சிங்கள மக்களிடமே கூறிவருகின்றேன். நாம் அந்த தேசத்தை சேர்ந்தவர்கள்.  

தமிழ் தேசத்திற்கு சுயநிர்ணய அடிப்படையில் சுயமாக ஆளும் விதத்திலான உரித்து சர்வதேச சட்டத்தில் உண்டு. அதனையே நியாயமாக கேட்கின்றோம். எமக்கே உரித்தில்லாத எவற்றையும் நாம்கோரவில்லை. அதனை ஏற்காது விடின் தனியாகச் செல்லவும் உரித்துண்டு என சர்வதேச சட்டம் கூறுகின்றது. 

இன்று சுயாட்சி அடித்தளம் கொண்ட ஒரே கட்சி தமிழ் அரசுக் கட்சி மட்டும்தான் . சிங்கள மக்களிடம் நான் சிங்கள மொழியிலேயே கூறியுள்ளேன். இதுவரை இலங்கை அரசு வாக்குறுதிகளை வழங்கியும் அதை நிறைவேற்ற தவறுவதனால் சரியான சர்வதேச நீதிப்பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா தீர்மானத்துடன் முன் நகர்த்தப்படுகின்றது. சிலர் அதனை குழப்பும் வகையில் அரசிற்கு கால அவகாசம் வழங்கப்போவதாக கூறுகின்றனர். 30/1 தீர்மானத்துக்கு இலங்கை அரசும் இணங்கியது.

அதற்கு 18 மாத காலம் வழங்கி 2017 மார்ச்சில் அடுத்தது என்ன என்ற கேள்வியில் ஐ. நாவின் கையில் தொடர்ந்து இருக்க 34/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இங்கே கூறப்பட்டது அரசிற்கு 2 ஆண்டுகால  அவகாசம் வழங்கியதாக கூறினர். அவ்வாறு இல்லாது விடின் 2017 உடன் ஐ.நா வின் சர்வதேச மேற்பார்வையும்   நின்று போயிருக்கும். சர்வதேசத்தின் பிடியிலிருந்து இலங்கை அகன்றிருக்கும் 

தற்போது பிரித்தானியா ஒரு தீர்மானத்தை கொண்டுவர முயற்சிக்கும்போது மேலும் கால அவகாசம் என்கின்றனர். அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றாவிடின் இலங்கை அதில் இருந்து முழுமையாக வெளியேறும். பாதுகாப்புச் சபைக்கு கொண்டுபோக வேண்டும் என சிலர் கூறுகின்றனர்.

அது கடினமானது. அதனை முடிந்தால் யாராவது செய்யுங்கள். அவ்வாறு கொண்டு சென்றால் நாம் எமது ஆதரவை வழங்குவோம். அதற்காக மனித உரிமை தீர்மானத்தை கைவிட முடியாது. இந்தத் தீர்மானத்தை கைவிட்டு செல்ல முடியாது. அதற்கு இணங்க முடியாது. சர்வதேச மேற்பார்வைதான் பிரதமரையே இவ்வாறு உரையாற்ற வைத்தது.

(யாழ். குறூப் நிருபர்)

Mon, 02/18/2019 - 09:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை