அரச வருவாயை அழிக்கும் திணைக்களங்களை இன்றும் கட்டுப்படுத்த முடியாத நிலை- ஜனாதிபதி

பிணை முறி மோசடியாளர்களை இந்த  அரசாங்கம் இருக்கும் வரை தண்டிக்க முடியாது

இலஞ்சம், ஊழல், திருட்டு போன்றவை வேரூன்றியுள்ள இந்த நாட்டை கட்டியெழுப்ப கணக்காய்வு சேவையை வலுவூட்ட வேண்டு மென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பத்தரமுல்ல, கணக்காய்வு திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் நேற்று (26) நடைபெற்ற இலங்கை கணக்காய்வு சேவை சங்கத்தின் 61ஆவது வருடாந்த பொதுச்சபை கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய அவர்:

அரச நிறுவனங்களுக்குள் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெறாவிட்டால் வருடாந்த வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு வெளிநாடுகள் மற்றும் அரச வங்கிகளில் கடன் பெறும் தேவை இருக்காது. அரசாங்கத்திற்கு வர வேண்டிய வருமானத்தை அழிக்கும் சில திணைக்களங்களை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியாதுள்ளது.

நாட்டின் வருமானத்தை அழிக்கும் இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் எவரும் பேச முன்வருவதில்லை.இது தொடர்பில் ஊடக நிறுவனங்கள் எந்தவிதமான தகவல்களையும் வெளிக்கொண்டு வராதது கவலை அளிக்கிறது.

தன்னைப் பற்றி எந்தவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ஜனாதிபதியாக பொறுப்புக் கூற வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த நான்கு ஆண்டு காலமாக முறையாக நிறைவேற்றியுள்ளேன்.

மத்திய வங்கி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து குற்றவாளிகளை மக்கள் முன் வெளிச்சம் போட்டு காட்டும் நடவடிக்கைகளை மேற் கொண்டுவருகிறேன்.எனினும் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் மாற்றமடையும் வரை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் சந்தர்ப்பம் கிடைக்காது.

மத்திய வங்கி நிதி மோசடி தொடர்பில் கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிரதான பரிந்துரையாக தடயவியல் கணக்காய்வும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இந்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு இலஞ்ச, ஊழல், குற்றப்புலனாய்வு ஆணைக்குழுவின் சட்டத்தில் ஓர் சரத்தை மாற்ற வேண்டியுள்ளது.ஆனால் நாளுக்கு நாள் இந் நடவடிக்கை காலந்தாழ்த்தப்பட்டு வருகின்றது.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க குறைந்தபட்சம் 15 அல்லது 20 வருடங்கள் எடுக்கும்.

2015 க்கு முன்னர் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மோசடிகளை கண்டறிவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து அதன் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.இந்தப் பரிந்துரைக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அந் நிறுவனங்களின் பொறுப்பாகும்.

இந்த ஆணைக்குழுவைப் போன்றே தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற இலஞ்சம் மற்றும் மோசடிகளை கண்டறிவதற்கும் அண்மையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்தேன். தனது ஆட்சியில் இடம்பெறும் இலஞ்சம் மற்றும் ஊழலை கண்டறிவதற்கு இவ்வாறான ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு இதற்கு முன்னர் எந்தவொரு அரச தலைவரும் முன்வரவில்லை என்றும் தெரிவித்தார்.

 

Thu, 02/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை