பிரதமர் ரணில் மூன்று நாட்கள் வடக்கு விஜயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (14) வியாழக்கிழமை வட பகுதிக்குச் செல்லவுள்ளார்.

இவ்விஜயத்தின்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் கலந்துகொள்வார். நாளை காலை 9.30 இற்கு வலிகாமம் பிரதேச செயலகத்தின் புதிய  கட்டடத்தையும் அவர் திறந்து வைக்கவுள்ளார்.

பிற்பகல் 10.30 இற்கு யாழ். மாவட்டச் செயலகத்தில் வீடமைப்பு மற்றும் மீள் குடியேற்றம், மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் குறித்த கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்கின்றார்.

பிற்பகல் 2 மணிக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் விபத்துச் சேவை பிரிவைத் திறந்து வைக்கும் பிரதமர், அதனையடுத்து மூன்று மணிக்கு பலாலி விமான நிலையத்தைப் பார்வையிடச் செல்வார்.

மாலை 3.45 இற்கு மயிலிட்டி கிராமத்தில் மீள் குடியேற்ற வீடமைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நடும் வைபவத்திலும் பிரதமர் கலந்து கொள்வார். அத்துடன் மாலை 4.30 இற்கு காங்கேசன்துறை துறைமுகத்தைப் பார்வையிடவுள்ளார்.

மறுதினம் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர், அன்று காலை 9.இற்கு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உபகரணங்களை கையளித்து விபத்துப் பிரிவுக்கான அடிக்கல்லையும் நாட்டி வைப்பார்.

முற்பகல் 10.30 இற்கு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மீள் குடியேற்றம், அபிவிருத்தி, வீடமைப்பு தொடர்பான முன்னேற்றம் குறித்த மாநாடும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

அன்று பிற்பகல் 2.30 இற்கு மன்னார் மாவட்டத்துக்கு வருகை தந்து மாவட்டச் செயலகத்தில் நடைபெறும் வீடமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த முன்னேற்ற கலந்துரையாடலிலும் பிரதமர் கலந்துகொள்வார்.

மாலை 4 மணிக்கு மன்னார் பள்ளிமுனையில் மீள்குடியேற்றக் கிராமத்தில் வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நடும் வைபவமும் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது.

மாலை 4.30 இற்கு மன்னார் மத்திய பஸ் நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பில் பிரதமர் உரையாற்றுவார்.

மறு நாள்16 ஆம் திகதி சனிக்கிழமை பிரதமர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்து காலை 10.30 இற்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகததில் நடைபெறும் மாவட்ட வீட்டுத் திட்டம், மீள்குடியேற்றம், மாவட்ட அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பான முன்னேற்றக் கலந்துரையாடல் மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்பார்.

எம். ஏ. எம். நிலாம்

 

Wed, 02/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை