நிதியியல் ரீதியான தோல்வியை மீள கட்டியெழுப்ப மத்திய வங்கி தலையீடு

த பினான்ஸ் கம்பனி பிஎல்சி 

நிதியியல் ரீதியாகத் தோல்விகண்டுள்ள த பினான்ஸ் கம்பனி பிஎல்சி நிறுவனத்தை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் புதிய வைப்புகளை ஏற்பதில்லையென்றும், கடன்கள் மற்றும் முற்பணங்கள் பகரிந்தளிக்கப் படுவதைக் கட்டுப்படுத்தவும் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.  

கடந்த 8ஆம் திகதி கூடிய மத்திய வங்கியின் நாணயச் சபை இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது. த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் பலயீனமான நிதியியல் செயல்பாட்டைக் கருத்திற்கொண்டு, கம்பனியின் வைப்பாளர்களினதும் ஏனைய ஆர்வலர்களினதும் நலன்களைப் பாதுகாக்கும் நோக்குடனும் இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.  

மீள்கட்டமைப்புச் செயன்முறையை வசதிப்படுத்தும் பொருட்டு வங்கித்தொழில் மற்றும் நிதியியல் நிபுணர்கள் குழாமொன்று இலங்கை மத்திய வங்கியால் நியமிக்கப் பட்டுள்ளது. கம்பனி, வாய்ப்புமிக்க முதலீட்டாளர்களின் முன்மொழிவுகள் மற்றும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து அதனை நிறைவு செய்ய முடியும்.  ஏற்புடைய சட்டங்களுக்கும் ஒழுங்குவிதிகளுக்கும் அமைவாக இலங்கை மத்திய வங்கி த பினான்ஸ் கம்பனி பிஎல்சியை பொருத்தமான முதலீட்டாளர்க ளுடன் முன்னெடுப்பதற்கு வசதியளிக்கும் என்றும்  மத்திய வங்கி அறிவித்துள்ளது.  

அதேவேளை, கம்பனியின் அனைத்துக் கடன் பெறுநர்களும் தமது நிலுவைகளை செலுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப் பட்டுள்ளது.

வைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இலங்கை மத்திய வங்கியானது மேலதிக நடவடிக்கைகளை எடுத்துவருவதுடன் கம்பனியின் தொழிற்பாடுகளை மிகவும் அவதானமாக கண்காணிப்பதாகவும் அறிவித்துள்ளது.  

மீள்கட்டமைப்புச் செயன்முறையுடன், காசுப் பாய்ச்சலினை மேம்படுத்தவும்,வாய்ப்பான முதலீட்டாளர்களூடாக கம்பனியின் மீளெழுச்சியை  வசதிப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. வைப்புக்காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தினால் வைப்பாளர் ஒருவருக்கு 6 இலட்சம் ரூபாவைக் கொண்ட உயர்ந்தபட்ச தொகையால் அனைத்து வைப்பாளர்களினதும் நலன்கள் பாதுகாக்கப்படுமென்ற விடயத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. இது, 93 சதவீதமான வைப்பாளர்களின் தொகையை முழுமையாக உள்ளடக்குவதால், இது தொடர்பில் வைப்பாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. 

Mon, 02/18/2019 - 08:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை