மலையக தொழிலாளர்கள் இலங்கையர் என்ற ரீதியில் பூரண பிரஜையாக வாழ வேண்டும்

இந்த நாட்டில் மலையக பிரதேசங்களில் வாழ்கின்ற தொழிலாளர்கள் இலங்கையர் என்ற ரீதியில் பூரண பிரஜையாக வாழ வேண்டும். அதை பெயருக்காக மட்டும் மட்டுப்படுத்த முடியாது. அத்துடன் ஒரு பெயர் பலகையாக இருக்கவும் கூடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பொகவந்தலாவ பிரிட்வெல் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 155தனிவீடுகள் அடங்கிய “வீ.கே.வெள்ளையன் புரம்” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

மலையக மக்களுக்கு அபிவிருத்திகளை மேற்கொள்ள சாராயம் வழங்கப்போவதில்லை என்று அன்று தெரிவித்த நான் வீடுகளை கொடுப்பேன் என்று தெரிவித்தேன்.

அதேபோல எமது அரசாங்கத்தில் 25,000வீடுகளை இம்மக்களுக்கு வழங்கவுள்ளோம். மீண்டும் சொல்கிறேன். சாராயம் இல்லை. வீடுகள் உண்டு என்று.

இந்த நாட்டில் மலையக பிரதேசங்களில் வாழ்கின்ற தொழிலாளர்கள் இலங்கையர் என்ற ரீதியில் பூரண பிரஜையாக வாழ வேண்டும். அதை பெயருக்காக மட்டும் மட்டுப்படுத்த முடியாது. அத்துடன் ஒரு பெயர் பலகையாக இருக்கவும் கூடாது.

எனவே கல்வி, சுகாதாரம் உட்பட இலங்கையில் எவ்விடத்திற்கு சென்றாலும் தொழில் கிடைக்கும் உரிமையும், பிரஜை என்ற அந்தஸ்த்தின் அடிப்படையில் அனைத்து உரிமைகளும் இவர்களுக்கு கிடைக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஏனைய மக்களுக்கு உள்ளது போல காணிகள், கிராமம் ஆகியவையும் இருக்க வேண்டும்.

எனவே உண்மையான பிரஜைகளாக வாழ வேண்டும் என்றால் ஏனைய மக்களை போல் உரிமைகளும் இவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

இதை நான் பிரதமராகுவதற்கு முன்பே சொல்லியிருந்தேன். நடைமுறைப்படுத்த காலம் போதாமல் இருந்தது. ஏனையவர்களும் இதை நடைமுறைப்படுத்தவில்லை.

மாறாக மலையக மக்களை முட்டாளாக்கி செயற்பட்டனர். இதை நாம் இப்போது மாற்றியுள்ளோம். 7பேர்ச் காணிகளில் வீடுகளை கட்டியமைக்கின்றனர்.

இந்திய அரசாங்கததிற்கும் நன்றி கூற வேண்டும். இவ் வீடுகளுக்கு செல்லும் பாதைகள் குடிநீர் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை அரசு மேற்கொள்கின்றது. இது உங்கள் கிராமம் பரம்பரையாக வாழலாம். எதிர்வரும் காலத்தில் மேல் மாடி கட்டியும் வாழ முடியும். இவ்வாறே கிராமம் உருவாகுகின்றது.

இந்திய பிரதமர் மோடி மேலும் 15,000வீடுகளை பெற்றுத்தர சம்மதித்துள்ளார். இவ் வேளையில் அவருக்கும் நன்றி கூற வேண்டும். தென் பகுதிக்கும், வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றது. இந்த வருடம் நடுவில் மேலும் 5000வீடுகளும் 2020ல் 5000வீடுகளும் மலையக மக்களுக்கும் கிடைக்கும்.

நாம் அடுத்த முறையும் ஆட்சிக்கு வரும் போது இன்னும் பல வீடுகளை கட்டியமைப்போம். முதல் முறையாக தேசிய வீடமைப்பு திட்டத்திற்குள் மலையகத்தை உட்படுத்தியுள்ளோம்.

அதேபோன்று மீள்குடியேற்றத்திற்கு 40,000வீடுகளை கட்டியமைப்போம். வீடமைப்பு அமைச்சுக்கு கீழ் இதனை கொண்டு சென்றுள்ளோம். நாட்டில் மத்திய வருமானத்தில் வாழ்கின்றவர்களுக்கு மாடி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். தோட்டப்புறங்களில் தனி வீடுகளை அமைத்து கிராமமயமாக்கபட்டுள்ளதால் தோட்ட மக்கள் தோட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டவர்களாக இல்லாமல் சுதந்திரமாக வாழ்வதற்காக வழி செய்துள்ளோம்என்றார்.

Sun, 02/24/2019 - 16:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை