தென்னாபிரிக்க - இலங்கை முதல் டெஸ்ட் இன்று

இலங்கை – -தென்னாபிரிக்க அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் 1.30 மணி (இலங்கை நேரப்படி) இடம்பெறும்.

சிரேஷ்ட வீரர்களின் ஓய்வுக்கு பின்னர் சர்வதேச அரங்கில் தொடர்ந்தும் தடுமாறி வந்த இலங்கை அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் நல்ல பதிவுகளை காட்டாத போதிலும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே செயற்பட்டு வந்திருந்தது.

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடருடன் இலங்கை அணி தாம் கடைசியாக விளையாடிய மூன்று டெஸ்ட் தொடர்களையும் பறிகொடுத்து மோசமான முடிவுகளை காட்டியிருக்கின்றது.

தொடர்ச்சியான தமது இந்த டெஸ்ட் தோல்விகளை தடுக்க உடனடி மாற்றங்கள் சிலவற்றை மேற்கொண்டுள்ள இலங்கை அணி புதிய பரிமாணத்தில் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கின்றது.

இரண்டு அணிகளதும் கடந்த கால மோதல்கள்

தென்னாபிரிக்க அணி கிரிக்கெட் போட்டிகளுக்கு மீள் பிரவேசம் மேற்கொண்டதன் பின் இரண்டு அணிகளும் இதுவரையில் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருப்பதோடு, இவற்றில் தென்னாபிரிக்க அணி 14 வெற்றிகளையும் இலங்கை அணி 7 வெற்றிகளையும் பதிவு செய்திருக்கின்றது. இதேநேரம் 6 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்திருக்கின்றன.

தென்னாபிரிக்க மண்ணை நோக்கும் போது இரு அணிகளும் 13 டெஸ்ட் போட்டிகளில் அங்கே விளையாடியுள்ளன. இதில் தென்னாபிரிக்க அணி 11 வெற்றிகளையும் இலங்கை அணி ஒரு வெற்றியையும் பதிவு செய்திருக்கின்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். எஞ்சிய ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்திருக்கின்றது.

கடைசியாக தென்னாபிரிக்க வீரர்களை இலங்கை அணியினர் தமது சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-–0 என வைட்வொஷ் செய்திருந்திருந்தனர். ஆனாலும் மேற்குறிப்பிட்ட கடந்தகாலப் பதிவுகள் தென்னாபிரிக்க மண்ணில் இலங்கை அணி இதுவரையில் ஓரேயொரு டெஸ்ட் வெற்றியினை மாத்திரம் பெற்றிருப்பதையே காட்டுகின்றது.

அத்தோடு தென்னாபிரிக்கா போன்று வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நியூசிலாந்து, அவுஸ்திரேலிய ஆடுகளங்களிலேயே இலங்கை அணி தமது அண்மைய டெஸ்ட் தொடர்களை பறிகொடுத்திருக்கின்றது.

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியில் பல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றது. இலங்கை அணிக்காக ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இரண்டு வீரர்கள் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட இவர்களுக்கு மேலதிகமாக நான்கு அறிமுக வீரர்களும் அணிக்குள் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதோடு, அனுபவ சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்திவ்ஸும் காயம் காரணமாக இத்தொடரில் விளையாடவில்லை. சுழல் வீரரான டில்ருவான் பெரேராவிற்கும் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.

தென்னாபிரிக்க டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன செயற்பட, பிரதி தலைவராக விக்கெட்காப்பு, துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல இருக்கின்றார்.

இலங்கைத் தரப்பில் துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் வீரர்களாக லஹிரு திரிமான்ன, அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரை குறிப்பிட முடியும்.

அணிக்கு மீள அழைக்கப்பட்டுள்ள கெளஷால் சில்வா, அறிமுக வீரர்களான ஓஷத பெர்னாந்து மற்றும் அஞ்சலோ பெரேரா போன்றோரும் வாய்ப்பளிக்கப்படும் பட்சத்தில் அவர்களும் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை பலப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

மறுமுனையில் தென்னாபிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான இடம் என்பதால் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுத்துறை சுரங்க லக்மாலினால் முன்னெடுக்கப்படவுள்ளது. லக்மாலிற்கு உறுதுணையாக அறிமுக வீரர் மொஹமட் சிராஸ், விஷ்வ பெர்னாந்து, கசுன் ராஜித மற்றும் சாமிக கருணாரத்ன ஆகியோர் காணப்படுகின்றனர்.

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சுத்துறை லக்ஷான் சந்தகன் மற்றும் அறிமுக இடதுகை சுழல் வீரர் லசித் எம்புல்தெனிய ஆகியோரால் பலம் பெறுகின்றது.

உத்தேச இலங்கை அணி – திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தனன்ஞய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாந்து, சாமிக கருணாரத்ன, லக்ஷான் சந்தகன்.

தென்னாபிரிக்கா

இலங்கையுடன் தமது கடைசி டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி இழந்த போதிலும் அவர்களது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அசைக்க முடியாத அணியாகவே காணப்படுகின்றது.

ஐ.சி.சி. இன் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில் காணப்படும் தென்னாபிரிக்க அணி கடந்த ஆறு ஆண்டுகளில் தமது சொந்த மண்ணில் இடம்பெற்ற எந்த டெஸ்ட் தொடர்களிலும் தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாகிஸ்தான் அணியினையும் தென்னாபிரிக்க மண்ணில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் (3–0 என) வைட்-வொஷ் செய்த தென்னாபிரிக்க அணி இலங்கை அணியுடனான சவாலையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்க தரப்பின் துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் வீரர்களாக அணித்தலைவர் பாப் டூ பிளேசிஸ், ஹஷிம் அம்லா, எய்டன் மார்க்ரம், சுபைர் ஹம்சா மற்றும் டீன் எல்கார் ஆகியோர் காணப்படுகின்றனர்.

இவர்களோடு அறிமுக சகலதுறை வீரர் வில்லியம் மூல்டரும் தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்க எதிர்பார்க்கப்படும் ஏனைய வீரர்களில் ஒருவராக இருக்கின்றார்

டேல் ஸ்டெய்ன், ககிஸோ றபாடா மற்றும் வெர்னோன் பிலான்தர் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சுத்துறையினை பலப்படுத்த கேசவ் மஹராஜ் சுழல் வீரராக தனது பங்களிப்பினை வழங்கவுள்ளார்.

உத்தேச தென்னாபிரிக்க அணி – பாப் டூ பிளேசிஸ் (அணித்தலைவர்), ஹஷிம் அம்லா, டீன் எல்கார், எய்டன் மார்க்ரம், டெம்பா பெவூமா, சுபைய்ர் ஹம்சா, குயின்டன் டி கொக், டேல் ஸ்டெய்ன், ககிஸோ றபாடா, வெர்னோன் பிலான்தர், கேசவ் மஹராஜ்

Wed, 02/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை