களுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்

களுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில் நிர்மாணிக்கப்படுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இங்கிரிய றைகம் தோட்டம் கீழ்ப்பிரிவு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய மாசிமக தேர்  திருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.  தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்:

களுத்துறை மாவட்டத்தின் மத்துகமவில் தமிழ்ப் பாடசாலைக்கான அடிக்கல் விரைவில் நடப்படும்.   களுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை ஒன்று கிடையாது.மிக விரைவில் இம்மாவட்டத்தில்  பாடசாலை அமைக்கப்படும்.

இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அமைச்சரவையில் அனுமதியுடன் 5ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு துப்பரவுப் பணிகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு அமைக்கப்படும்  தமிழ்ப் பாடசாலை கல்வி வளர்ச்சியின் அடையாளமாக விளங்கும். 

அழகான ரம்மியமான சூழலில் காணப்படும் இந்த ஆலயத்திற்கு அமைச்சராக வந்து கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு மேலதிகமாக எனக்கு கிடைத்துள்ளது. இம்முறை இது தூங்கி வழியும் ஒரு அமைச்சாக இருக்காது. எமது ஆலயங்கள் அறநெறிப் பாடசாலைகள் பண்பாடுகள் வளர்த்தெடுக்கப்படல் வேண்டும். மக்கள் தமது சமய விழுமியங்கள் பண்பாட்டை கட்டிக்காத்து வாழக்கூடிய காலம் உதயமாகியுள்ளது.புதிய அமைச்சின் ஊடாக சமூக மேம்பாடு, பாதைகள், கோயில்கள், பாடசாலைகள் அபிவிருத்தி எனஅதிக வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்திற்கு முதன்முறையாக எனது அமைச்சின் ஊடாக இரண்டு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .இந்த ஆலயத்திற்கு 5 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் விளையாட்டு மைதானத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

(இங்கிரிய தினகரன் நிருபர்) 

Fri, 02/22/2019 - 11:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை