வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலை ஊழியர்கள் 21 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்ட முறைகேடான பதவி உயர்வினை இரத்து செய்யக்கோரி இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் சாலைக்கு முன்பாக இன்று (20) அதிகாலை 5.30மணி தொடக்கம் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த சனிக்கிழமையன்று (16) வவுனியா சாலையின் 21 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அப் பதவி உயர்வானது எந்தவித தகைமைகளும் பாராது அரசியல் ரீதியில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது.

அதில் எமது சாலையினை சேர்ந்த நீண்டகாலமாக 20, 25 வருடங்களாக பணிபுரியும் எவரும் உள்வாக்கப்படவில்லை. அதேவேளை நாளாந்தம் ரூபா 750 மற்றும் 1000 ஊதியம் பெறும் ஊழியர்கள் நிரந்தரம் ஆக்கப்படவில்லை.

இதனை எதிர்த்து நாங்கள் 15 ஊழியர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.

முறைகேடான முறையில் வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் இரத்து செய்யப்பட்டு, நேர்முக பரீட்சை நடத்தப்பட்டு முறையாக பதவி உயர்வு வழங்கப்படுமாயின் ஏற்றுக்கொள்வோம். இல்லையெனில் இன்றிலிருந்து 14 நாட்களின் பின் சாகும் வரை உண்ணாவிரத்தில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்தனர்.

முறைகேடாக பதவி உயர்வுகளை இரத்து செய், தகுதி சேவைக்காலம், கல்வித்தகமை பாராது பதவி உயர்வு வழங்க முடியுமா? , தொழில் சங்கமே சாராயம் வாங்கிக் குடித்து சலுகைகளை அள்ளிக் கொடுக்காதே, 750 ரூபா நாளாந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களை நிரந்தரமாக்கு, கௌரவ ஜனாதிபதி அவர்களே முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை இரத்து செய்யுங்கள், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கியது எப்படி? போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகள் அவ் இடத்தில் தொங்க விடப்பட்டுள்ளன.

(கோவில்குளம் குறூப் நிருபர் - காந்தன் குணா)

Wed, 02/20/2019 - 13:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை