இந்தியாவை பெருமைப்பட வைத்த ஆஷா போஸ்லே

ஆஷா போஸ்லே ஒரு புகழ்பெற்ற பொலிவுட் இந்திய பின்னணி பாடகியாவார்.  அவர் இந்தியாவின் ‘இசைக்குயில்’ என போற்றப்படும் லதா மங்கேஷ்கரின்  சகோதரியாவார். இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி,  மலையாளம், குஜராத்தி போன்ற பதினான்குக்கும் மேற்பட்ட மொழிகளில்  பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், ரஷ்யன், செக், மலாய் என பல  அந்நிய மொழிகளிலும் பாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இரண்டு  தேசிய விருதுகளும் ஒன்பதுக்கும் மேற்பட்ட ஃபிலிம்பேர் விருதுகளும் இந்திய  அரசின் உயரிய விருதான “பத்ம விபூஷன்” விருதும் தாதா சாகேப் பால்கே  விருதும் மேலும் பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். கிட்டதட்ட  12000பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்தவர் ஆஷா போஸ்லே.

ஆஷா போஸ்லே  1933ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08  ஆம் நாள்  இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சாங்க்லி மாவட்டத்திலுள்ள “கோர்” என்ற  இடத்தில் தீனநாத் மங்கேஷ்கருக்கு மகளாக ஒரு மராத்தி குடும்பத்தில்  பிறந்தார்.

ஆஷா போஸ்லேவிற்கு ஒன்பது வயது இருக்கும்பொழுது, அவரது தந்தை இறந்துவிடவே  அவருடைய குடும்பம் புனேவிலிருந்து கோலாப்பூருக்கும் பிறகு மும்பைக்கும்  குடிபெயர்ந்தது. பிறகு அவரும் அவருடைய சகோதரியான லதா மங்கேஷ்கரும்  திரைப்படங்களில் பாடத்தொடங்கினார்கள். “சலா சலா நவ பாலா” என்ற மராத்தி  மொழிப் பாடலை “மாஜா பால்” என்ற திரைப்படத்திற்காக முதல் முதலாக பாடினார்.  1948ஆம் ஆண்டு “சுனரியா” என்ற திரைப்படத்தில் “ஸாவன் ஆயா” என்ற  பாடலை பாடி இந்தி திரையுலகிற்கு அறிமுகமானார். அவருக்கு 16வயது  நிரம்பியபொழுது 31வயதான கண்பத்ராவ் போஸ்லே என்பவருடன் வீட்டைவிட்டு ஓடிய  அவர், பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணமும்  செய்துகொண்டார். ஆனால் அவருடைய இல்லற வாழ்க்கையில் பல பிரச்சினைகளை  சந்தித்தது மட்டுமல்லாமல் அவரது கணவர் அவர் மீது சந்தேகப்பட்டு  வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். வயிற்றில் குழந்தையுடன் இருந்த ஆஷா  போஸ்லே தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் மீண்டும் தன் தாய் வீட்டிற்கே வந்து  சேர்ந்தார்.

தன்னுடைய குழந்தைகளை வழிநடுத்துவதற்காக தொடர்ந்து பாடத் தொடங்கிய ஆஷா  போஸ்லேவிற்கு ஆரம்பத்தில் அவர் பாடிய பாடல்கள் மக்களிடம் செல்வாக்கைப்  பெற்றுத் தரவில்லை. 1952ஆம் ஆண்டு “சஜ்ஜத் ஹூசையின்” இசையமைத்த “சங்தில்”  என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடினார். அந்தப் பாடல் அவருக்கு நல்ல பெயரை  பெற்றுதந்தது மட்டுமல்லாமல் நிறைய வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தது.  தொடர்ந்து பாடத்தொடங்கிய அவர், 1966ஆம் ஆண்டு ஆர். டி. பர்மன் இசையமைத்த  “தீஸ்ரி மஞ்சில்” என்ற திரைப்படத்திற்காக “காதல் உறழ்” என்ற பாடலைப்  பாடினார். பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து பல வெற்றிப் பாடல்களை  கொடுத்தது மட்டுமல்லாமல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணமும்  செய்துகொண்டனர்.

1970ஆம் ஆண்டுக்கு பின் அவர் பாடிய பல பாடல்கள் அவரை வெற்றியின் உச்சிக்கே கொண்டுசென்றது எனலாம்.

இசையமைப்பாளர் ஒ.பி. நய்யார், கய்யாம்,  ரவி, புகழ்பெற்ற இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மன், ராம் தேவ் பர்மன்,  இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஜெயதேவ், ஷங்கர் ஜெய்கிஷன், அனு மாலிக், மதன்  மோகன், லஷ்மிகாந்த் ப்யாரேலால், நௌஷாத், ரவீந்திர ஜெயின், என் தத்தா,  ஹேமந்த் குமார், ஜதின் லலித், பப்பி லஹிரி, கல்யாண்ஜி, உஷா கன்னா,  சித்திரகுப்த், ரோஷன் போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல வெற்றிப் பட  பாடல்களை கொடுத்தார்.

Wed, 02/06/2019 - 13:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை