முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம்; இணக்கப்பாடு எட்டுவதில் சிக்கல்

நீதி அமைச்சர் தலைமையிலான கூட்டம் ஒத்திவைப்பு

முஸ்லிம் விவாக- விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் நீதியமைச்சர் தலதா அத்துகோரள தலைமையில் பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. அப்போது திருத்தங்கள் மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணைக்குழு சார்பில் நீதியரசர் சலீம் மர்சூப் தயாரித்த அறிக்கை தொடர்பில் தொடர்ந்து முரண்பாடுகள் காணப்பட்டன. இதன் காரணமாக சரியானதொரு இணக்கப்பாட்டை எட்டமுடியாத நிலையில் கூட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஷரீஆ- முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக இவ்விடயம் நீண்ட காலமாக தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. நீதியமைச்சினால் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் ஆணைக்குழு அமைக்கப்பட்டு சட்டத்திருத்தங்களை சிபாரிசு செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. நீதியரசர் சலீம் மர்சூப் இந்த அறிக்கையை தயாரிப்பதில் மும்முரமாக செயற்பட்டுவந்தார். இடைப்பட்ட காலத்தில் ஆணைக்குழு இரண்டாகப் பிளவுபட்டது. சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஒரு அணியாகவும், நீதியரசர் சலீம் மர்சூப் மற்றொரு அணியாகவும் நின்று செயற்படும் நிலையில் திருத்தங்களை மேற்கொள்வதில் இரு தரப்பினரும் முரண்பட்டு வருகின்றனர். இந்த விடயத்தில் இருதரப்பும் ஒன்றுபட்டு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியதன் அவசியத்தை முஸ்லிம் புத்திஜீவிகள் வலியுறுத்தி வருகின்றனர்.  

இதேவேளை நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் எட்டப்பட்ட இணக்கங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:  

ஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டது. அதேவேளை, நாடு முழுவதிலும் காணப்படும் காதி நீதிமன்றங்னளை ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டு வந்து, திருமணம் சம்பந்தமான பிரச்சினைகளை இலகுவாகக் கையாள்வதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டன.  

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு சார்பில் நீதியரசர் சலீம் மர்சூப் தயாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.  

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான அலிஸாஹிர் மௌலானா, எச். எம். எம். ஹரீஸ், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி, உலமாக்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.  

எம்.ஏ.எம்.நிலாம்  

 

Sat, 02/09/2019 - 09:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை