முதலில் நடத்த வேண்டியது மாகாணசபைத் தேர்தலே

நடத்தப்படாவிட்டால் போராடவும் தயார்

எதிர்வரும் காலத்தில் நடைபெற வேண்டிய தேர்தல் தொடர்பாக பலவிதமாகக் கூறப்பட்டாலும் முதலில் நடத்த வேண்டியது மாகாண சபைத் தேர்தல் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

அத் தேர்தல் நடத்தப்படாவிட்டால் அதனை நடத்துவதற்கு போராடுவதாகக் கூறிய அவர் நவம்பர் மாதம் 10ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாதென்றும் அதற்கு முன் தான் இராஜினாமாச் செய்ய மாட்டேன் எனவும் கூறினார்.

கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (14) நடைபெற்ற பெபரல் அமைப்பின் 30வது ஆண்டு நிறைவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயல்பாடு என்னும் பெபரல் அமைப்பு தனது பயணத்தில் 30வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மஹிந்த தேசப்பிரிய, தேர்தலை சரியான நேரத்தில் நடத்துவது இன்று நாட்டின் முதன்மையான பிரச்சினையாக உள்ளதாகவும், மாகாணசபைத் தேர்தல் ஏன் என்று சிலர் கேள்வி கேட்பதாகவும் அவ்வாறு மாகாண தேர்தல் தேவையில்லையென்றால் அரசியலமைப்பிலிருந்து அதனை நீக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழு ஜனநாயகம் மற்றும் சர்வஜன வாக்குரிமைக்காக ஆஜராவதோடு, மக்களின் விருப்பம் சுதந்திர, நியாயமான சரியான காலத்தில் நடைபெறும் தேர்தல் மூலம் தெரியப்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் மனோ கணேசன் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும, உதய கம்மன்பில, தாரக பாலசூரிய, எம். திலகராஜ், லங்கா சம சமாஜக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரண, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம, பெபரல் அமைப்பின் பொதுச் செயலாளர் சமிந்த ராஜகருண, இலங்கை சர்வோதய இயக்கத்தின் தலைவர் கலாநிதி ஏ. டீ. ஆரியரத்ன, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Fri, 02/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை