மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை உதயம்

ஐவர் கொண்ட பணிப்பாளர் சபையும் நியமனம்

மலையகப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை நேற்று (07) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதற்கான வைபவம் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது. நிதி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாசார அமைச்சர் மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொண்ட இந்த வைபவத்தில் அதிகார சபைக்கான ஐவர் கொண்ட பணிப்பாளர் சபையும் நியமிக்கப் பட்டது. தலைவராக சந்திர ஷாப்ட்டரும் பணிப்பாளர்கள் சபையின் உறுப்பினர்களாக எம். வாமதேவன், பேராசிரியர் எஸ். சந்திரபோஸ், பேராசிரியர் பாலச்சந்திரன் கௌதமன், ரொசான் ராஜதுரை ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம் உரையாற்றியதாவது:

மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை மலையக மக்களின் வரலாற்றின் புதிய சகாப்தமாகும். மலைநாட்டு மக்களின் சகல தேவைகளும் இவ்வதிகார சபையினூடாக முன்னெடுக்கப்படும். எதிர்காலத்தில் மக்களின் தேவைகளை இந்த அதிகார சபையினூடாக நிறைவேற்ற முடியுமென்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுகையில்,

இந்த அதிகார சபையினூடாக தோட்ட மக்களின் தேவைகள் நிறைவேற்றப் படுவதுடன், அவர்களின் பொருளாதாரத் தையும் கட்டியெழுப்ப முடியும். விசேடமாக தோட்டத் தொழிலாளர்கள் கால்நடை வளர்ப்பு, மரக்கறி செய்கை, பழச்செய்கை, பூவளர்ப்பு, விவசாய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கு முகமாகவும் அவர்களை தேசிய பொருளாதாரத்தின் பங்குடமையாளர் களாக்கும் பொருட்டு நிதியமைச்சினூடாக ஸ்ரீலங்கா என்டபிரைஸ் ஊடாக கடன் முறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதனூடாக வட்டியற்ற கடனைப்பெற்று தோட்டத்திலுள்ள இளைஞர்கள் பயனடைய வேண்டும்.

இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக நடமாடும் சேவையொன்றை தோட்டங்களில் அறிமுகப்படுத்தவுள்ளேன். விசேடமாக இளைஞர்கள் வர்த்தகர்களாக மாற வேண்டும் என்ற எமது கனவை நனவாக்க முனவருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

போல் வில்சன்

Fri, 02/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை