துபாயில் கைதானோரின் விசாரணைகள் தாமதம்

இரத்த மாதிரிகள் மட்டுமே சோதனை

*இன்டர்போல் தலையீடுகள் எதுவுமில்லை

துபாயில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாகந்துர மதுஷ் மற்றும் ஏனைய 30 பேரும் இன்னும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வில்லை.

கைது செய்யப்பட்டவர்களின் இரத்த மாதிரி அறிக்கைகள் மட்டுமே கடந்த வாரம் நீதிமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் இந்த வாரமே நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

மாகந்துர மதுஷ் கைது விடயத்தில் இன்டர் போல் சர்வதேச குற்றப் பொலிஸ் அமைப்பு எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை யென்றும் அந்த அமைப்பின் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெறும் நபர்களை கைது செய்வது சம்பந்தப்பட்ட அங்கத்துவ நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப அந்த நாடுகளின் பொறுப்பெனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பாக இன்டர்போல் உதவுமா? என்று கேட்கப்பட்ட போது ,கைதிகளை நாடு கடத்தல் விடயத்தில் இன்டர்போல் சம்பந்தப்படுவதில்லை என்றும் அவ்வாறான நாடு கடத்தல் அங்கத்துவ நாடுகளின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டது.

மாகந்துர மதுஷ் தொடர்பாக இலங்கை பொலிஸார் கேட்டுக் கொண்டதற்கிணங்க  நீல அறிக்கையொன்றை இன்டர்போல் வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரு குற்றச் செயலை புரிந்தவரின் அடையாளம், அவர் இருக்கும் இடம், அவரது செயற்பாடுகள் தொடர்பாக மேலதிக தகவல் தேவைப் படும்போது இவ்வாறான நீல அறிக்கை வெளியிடப்படுவதுண்டு.

மாகந்துர மதுஷ் கைது, விடயத்தில் இலங்கையின் அக்கறையைப் பூர்த்தி செய்து கொள்வது தொடர்பாக அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகமும் துபாயில் உள்ள கொன்சியூலர் அலுவலகமும் துபாய் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுடன், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கேற்ப செயற்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கே.பி. எவ்வாறு சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டாரோ அதேபோல் மதுஷையும் ஏனையோரையும் இலங்கைக்கு அழைத்து வர அனைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டிருந்தது.இந் நிலையில் இலங்கையில் உள்ள ஊடகங்கள் அவ்வாறான திட்டங்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தி நிலைமையை மோசமாக்கியுள்ளதால் மதுஷை இலங்கைக்கு கொண்டு வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக,அரச தொழில்முயற்சி, கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.

“நாட்டின் நிலைமையை கருத்தில் கொள்ளாது முக்கிய விடயங்களையும் தேவையற்ற விடயங்களையும் ஒரே விதமாக ஊடகங்கள் வெளியிட்டு விடுகின்றன. இதனால் மதுஷை இலங்கைக்கு அழைத்து வருவதில் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் கிரியெல்ல குறிப்பிட்டார்.

 

Tue, 02/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை