இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் மீது தாக்குதல்

300 பயங்கரவாதிகள் பலியென டில்லி அறிவிப்பு

உயிர்ச்சேதமில்லை; அப்பட்டமான பொய்யென பாக். மறுப்பு

*இந்தியாவின் ஆத்திரமூட்டலுக்கு பதிலடி கொடுப்போம்
*இந்தியா மிகவும் பாதுகாப்பான கரங்களில் உள்ளது

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா நேற்று அதிகாலை அதிரடித்தாக்குதலை நடத்தியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருந்த ஜெய்ஷ் இ முகமத் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை இலக்குவைத்து இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 300 பயங்கரவாதிகள் பலியானதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தியாவின் இந்தத் தாக்குதல் அறிவிப்பை முற்றாக நிராகரித்துள்ள பாகிஸ்தான், இது தேர்தலை இலக்காகக் கொண்ட ஒரு புனைவு அறிவிப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியா குறிப்பிடும் பகுதியில் எந்தவொரு தாக்குதலும் இடம்பெறவில்லையென்றும் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அதன் உண்மைத் தன்மையை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இந்திய  இராணுவத்துக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் எந்தநேரத்திலும் போர் ஏற்படலாம் என்ற சூழல் நிலவியது. இந்நிலையில் நேற்று அதிகாலை பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பகுதியில் 1000 கிலோ எடைகொண்ட குண்டுகளை வீசி பயங்கரவாத நிலைகளைத் தாக்கியழித்திருப்பதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இதில் ஜெய்ஷ் இ முகமதின் ஏராளமான தீவிரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள் மற்றும் தற்கொலைப் படையினர் 300ற்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களை நடத்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருந்ததாகவும் அதனை முறியடிக்கும் நோக்கிலேயே இந்திய விமானப்படையினர் அவர்கள் மீது வான்தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் இந்திய வெளியுறுவுத்துறை செயலர் விஜய் கோகலே புதுடில்லியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்திய இராணுவத்தினரின் தொடரணி மீது தீவிரவாத அமைப்பொன்று நடத்திய தாக்குதலில் 40 இற்கும் அதிகமான இராணுவத்தினர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்தது. பயங்கரவாதத்தை முற்றாக அழிக்கும்வரை தமது நடவடிக்கைகள் தொடரும் என இந்திய இராணுவத்தினர் அறிவித்திருந்தனர். இவ்வாறான நிலையிலேயே நேற்று அதிகாலை இந்திய விமானங்கள் இரு நாட்டுக்கும் இடையிலான பாதுகாப்பு எல்லையையும் தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளன. 1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாறு எல்லைதாண்டிச் சென்று இந்தியா தாக்குதல் நடத்தியது முதல் சந்தர்ப்பமாகும் என்றும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இத்தாக்குதலைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்புக் கவுன்சிலை அவசரமாகக் கூட்டி நிலைமைகளை ஆராய்ந்திருந்தார். இதில் விமானப்படையினரின் தாக்குதல் தொடர்பில் முக்கிய அமைச்சர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. பாகிஸ்தான் எந்நேரமும் பதிலடி நடத்தலாம் என்பதால், விமானப் படையினரை எந்நேரமும் தயாராக வைத்திருப்பது என்றும் இங்கு முடிவுசெய்யப்பட்டது.

விமானத் தாக்குதல் நடத்தப்பட்டு சில மணி நேரங்களின் பின்னர் இராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, "நாடு தற்பொழுது பாதுகாப்பானவர்களின் கைகளில் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறேன்" எனக் கூறினார். எந்தவொரு தரப்பினருக்கும் நாட்டை தாரைவார்த்துக் கொடுப்பதற்கோ அல்லது வளைந்துகொடுப்பதற்கோ இடமளிக்கப்போவதில்லையென்றும் அவர் கூறியிருந்தார்.

இந்திய விமானப்படையினர் நடத்திய இத்தாக்குதலுக்கு இந்தியத் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களையும், விமானப்படையினருக்கான கௌரவத்தையும் செலுத்தி வருகின்றனர். இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தமது வாழ்த்துக்களைக் கூறியுள்ளனர்.

 

பாகிஸ்தான் மறுப்பு

தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக இந்தியா முன்வைக்கும் அறிவிப்பை முற்றாக மறுத்திருக்கும் பாகிஸ்தான் அரசாங்கம், தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடங்கள் எந்தவொரு மனிதர்களும் வசிக்காத வெற்றுப் பிரதேசம் எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவசரமாக தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இதில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு, நிதி அமைச்சர்கள், கூட்டுப் படைகளின் பிரதானி, இராணுவ, விமானப்படை அதிகாரிகள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர். தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளோம் என்ற இந்தியாவின் அறிவிப்பை பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புச் சபை முற்றாக மறுத்துள்ளது. இந்தியா மீண்டும் ஒருமுறை தனது சுயதேவைக்கான, பொறுப்பற்ற, கற்பனைக் கூற்றை முன்வைத்திருப்பதாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

பிராந்தியத்தின் சமாதானம் மற்றும் நிலைப்புத் தன்மையை ஆபத்துக்குள் தள்ளி தேர்தல் சூழ்நிலையில் தனது உள்ளூர் தேவையை நிறைவேற்றுவதற்காக இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாகவும் பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியதாக இந்தியாவினால் கூறப்படும் இடங்களின் நிலைமைகளை முழு உலகமும் அறிந்துகொள்ள முடியும். இந்தப் பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் அழைத்துச் செல்லப்படும் என்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

"இந்தியா வேண்டுமென்றே ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்டுள்ளது. இதற்கு பதிலடி வழங்குவதற்கான காலம் மற்றும் நேரம் என்பனவற்றை பாகிஸ்தான் தீர்மானிக்கும்" என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல பாராளுமன்றத்தின் ஆணை யைப் பெறுவதற்கும் பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக பாகிஸ்தான் பிரதமர் இன்றைய தினம் தேசிய கட்டளை அதிகார சபையை விசேடமாகக் கூட்டியுள்ளார். பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட சகல தேசிய அமைப்புக்களும் நேரக்கூடிய எந்த சம்பவங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும் எனப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்டளையிட்டுள்ளார். பிராந்தியத்தில் பொறுப்பற்ற இந்தியாவின் கொள்கை தொடர்பில் உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு எடுத்துக் கூறுவதற்கும் பாகிஸ்தான் பிரதமர் திட்டமிட்டிருப்பதாகப் பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

Wed, 02/27/2019 - 08:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை