கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது

நிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் அனைவரும் சொந்த மாகாணங்களுக்கு இடமாற்றம் பெற்றுவர முடியுமென ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அறிவித்துள்ளமை நடைமுறைச் சாத்தியமற்றதெனவும் இவ்வாறு இடமாற்றம் பெற்றுச் செல்வது நிர்வாகச் சிக்கலை ஏற்படுத்துமென்பதால் அவ்வறிக்கையை ஆளுநர் உடன் வாபஸ் பெற வேண்டுமெனவும்  விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மத்துகம தேர்தல் தொகுதி தெபுவன பெலபிட்டியாகொட பகுதியில் நேற்று முன்தினம் (19) மலையக மக்கள் முன்னணியின் புதிய அலுவலகத்தை அமைச்சர் இராதாகிருஸ்ணன் திறந்து வைத்து உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.  

அமைச்சர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது, ஆளுநரின் இந்த அறிவிப்பால் ஏனைய மாகாணங்களிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளும் பெரிதும் பாதிக்கப்படும். எனவே ஒரு ஆளுநராக தீர்மானங்களை எடுக்கின்ற பொழுது மிகவும் கவனமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.   

கிழக்கு ஆளுநரின் இந்தச் செயற்பாடு கல்வித்துறைக்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.ஏனெனில் ஏனைய மாகாணங்களிலிருந்து வருகை தந்து ஆசிரியர்களாக வெவ்வேறு மாவட்டங்களில் தொழில்புரிவோர் அனைவரும் தாங்களும் தமது மாகாணங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தால் நிலைமையை எவ்வாறு சமாளிப்பது.

கல்வித்துறையை பொறுத்தளவில் ஒரு மாவட்டத்தில் அதிகமான கணித ஆசிரியர்கள் உருவாகலாம் இன்னுமொரு மாவட்டத்தில் அததிகமான விஞ்ஞான ஆசிரியர்கள் உருவாகலாம் வேறு சில மாவட்டங்களில் ஆங்கில மற்றும் ஏனைய பாடங்களுக்கான ஆசிரியர்கள் உருவாகலாம் எனவே இவர்கள் அனைவரையும் அனைத்து மாவட்டங்களுககும் நிலவுகின்ற ஆசிரியர் குறைபாடுகளை கருத்திற் கொண்டு கல்வி அமைச்சே அவர்களை வெவ்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கிறது.

ஆனால் ஆளுநர் கூறுவதைப் போல கிழக்கு மாகாண ஆசிரியர்கள் எல்லோரும் கிழக்கு மாகாணத்தில்தான் வேலை செய்ய வேண்டும் எனஅவர் நினைத்தால் ஏனைய மாகாணங்களிலுள்ள தமிழ் சிங்கள ஆசிரியர்களும் தாங்களும் தங்களுடைய மாகாணத்திற்கு சென்று சேவை செய்யவே விரும்புவார்கள். இது நடைமுறை சாத்தியமான ஒரு விடயமா என்பதை சிந்தித்துப் பாரக்க வேண்டும்.  

ஆசிரியர்களும் அரச உத்தியோகஸ்தர்களும் தாங்கள் பதவிகளை ஏற்றுக்கொள்கின்ற பொழுது, இலங்கையின் எப் பகுதியிலும் கடமையாற்ற தயாராக இருப்பதாக சத்தியபிரமாணம் செய்கின்றனர்.எனவே அதுவே அரசாங்க உத்தியோகஸ்தர்களின் நிலை.அதனை மாற்றி கிழக்கு மாகாண ஆசிரியர்கள் அனைவரும் கிழக்கில்தான் வேலை செய்ய வேண்டும் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது.

இந்த செயற்பாடு காரணமாக பிரதேசவாதம் உருவாகலாம். ஏனைய விடயங்களை போல கல்வியைக்கையாள முடியாது. கல்வித்துறை என்பது மிகவும் நுணுக்கமாக ஒவ்வொரு விடயத்தை ஆராய்ந்து பார்த்து முடிவுகளை எடுக்க வேண்டும்.இவ்விடயத்தை மாகாண செயலாளர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்களென நினைக்கின்றேன்.அவ்வாறு செய்தால் மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சையும் மாகாண அரசின் கல்வி அமைச்சையும்  அதிகாரிகளால் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும்.

எனவே இந்த விடயத்தை கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா திரும்பி பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

(நுவரெலியா தினகரன் நிருபர்)

Thu, 02/21/2019 - 12:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை