பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இராணுவம் கொன்றதற்கு ஆதாரமில்லை

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனையும், இசைப் பிரியாவையும், இராணுவம் கைதுசெய்து சுட்டுக்கொன்றதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

போலிக் காணொளிகளையும், புகைப் படங்களையும் முன்வைத்து படையினர் மீது சிலர், குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் போர்க் குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர்,

பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சிறுவன் அல்ல என்றும், அவர் ஒரு போராளி என்றும், அவருக்கு 5 மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

பல போராளிகளின் உயிரிழப்புகளுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பே பொறுப்புக்கூற வேண்டுமே தவிர, இலங்கை அரசாங்கம் அல்ல என்றும் குறிப்பிட்டார். அத்துடன், இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த புலிகள் அமைப்பின் 12,500 போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் புலம்பெயர் புலிகள் அமைப்பு களின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே, நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தமது படையினரை எவரும் தண்டிக்க முடியாது என்றும், இதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

 

Tue, 02/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை