எவராக இருந்தாலும் மன்னிப்பே கிடையாது

அநுராதபுரத்தில் ஜனாதிபதி எச்சரிக்ைக

போதைப்பொருள் கடத்தல், சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களது பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் நேற்று (14) நடைபெற்ற சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுராதபுர மாவட்ட விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவம் என்பது இன்று ஒரு முக்கிய விடயமாக அறியப்பட்டாலும் இது இன்னும் உரிய முறையில் நடைமுறை ரீதியாக மக்கள் மத்தியில் அமுல்படுத்தப்படவில்லை என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகள் ஒருபோதும் எவரும் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, காலநிலை மாற்றத்தின் காரணமாக உருவாகியிருக்கும் அனர்த்தங்களின் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு மத்தியில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக புதிய சர்வதேச ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாரிய சுற்றாடல் அழிவுகளுடன் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலைமை பற்றி அனைத்து மக்களும் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் வாழும் உரிமையான சுற்றாடலை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களுடன் தாமதிக்காது அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இன்று பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசங்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் நாட்டின் சுற்றாடல் அழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தும் மின்சார வாள்களை பயன்படுத்துவதற்கு அனுமதிப் பத்திரங்களை கட்டாயமாக்கிய முதலாவது அரசாங்கம் என்ற வகையில் அண்மையில் அது பற்றிய தீர்மானத்தை மேற்கொண்டமை சுற்றாடல் பாதுகாப்பை கருத்திற்கொண்டேயாகும் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 01ஆம் திகதிக்கு முன்னர் மின்சார வாள்களை வைத்திருப்பவர்கள் அதுபற்றி பொலிஸாருக்கு தெரியப்படுத்தி, பிரதேச செயலகத்தின் ஊடாக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொலிஸாரும் கிராமிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து கள அலுவலர்களும் இது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

அனுமதிப் பத்திரமின்றி இந்த மின்சார வாள்களை தம்வசம் வைத்திருந்தால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்குவது குறித்து விரைவில் வர்த்தமானி பத்திரம் மூலம் அறிவிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த மின்சார வாள்களை நாட்டுக்கு கொண்டுவரும் வர்த்தக நிறுவனங்களுடன் கலந்துரையாடி அதுபற்றிய தீர்மானமொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

முறையற்ற கழிவு முகாமைத்துவமும் சுற்றாடல் அழிவுகளுக்கு பெரிதும் காரணமாகின்றது என குறிப்பிட்ட ஜனாதிபதி, முறையான கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்களுக்கான அரச திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அதற்கெதிரான மக்கள் எதிர்ப்புகள் பெரும் தடையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நவீன தொழில்நுட்பத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் கழிவு முகாமைத்துவ திட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் போதுமான தெளிவு இல்லாத காரணத்தினால் இத்தகைய எதிர்ப்புகள் தோன்றுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஒரு பகுதியில் கழிவு முகாமைத்துவ திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் பல இடை உற்பத்திகளுடன் விவசாய துறைக்கான பல நன்மைகளும் அப்பிரதேசத்திற்கு அதன் மூலம் கிடைக்குமென்றும் சுட்டிக்காட்டினார்.

அநுராதபுர மாவட்டத்தில் சுற்றாடல் பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன், மல்வத்து ஓயா அபிவிருத்தி திட்டத்தின் நடவடிக்கைகளையும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அநுராதபுர வீரசிங்ஹ ஹரிச்சந்திர விளையாட்டரங்கு வளாகத்தில் ஜனாதிபதியால் மரக்கன்றொன்று நடப்பட்டு அநுராதபுர மாவட்ட சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அநுராதபுர மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ள சுற்றாடல் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் உள்ளடங்கிய அறிக்கை மாவட்ட செயலாளர் ஆர்.எம்.வன்னிநாயக்கவினால் ஜனாபதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அநுராதபுர மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு பழக்கன்றுகளை வழங்கும் வேலைத்திட்டம், பழச் செய்கை வேலைத்திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குதல், மாவட்டத்தில் 1,000 இலுப்பை மரக்கன்றுகளை நடுவதற்கான நிதியுதவியை வழங்குதல், புனித நகரிலிருந்து முறையற்ற கழிவு முகாமைத்துவத்தை தடுப்பதற்கான புதிய வேலைத்திட்டமொன்றுக்கு நிதி வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றதுடன், மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் பங்களிப்பில் மாவட்ட மக்களுக்கு மழைநீரை சேகரிக்கும் 5,000 தண்ணீர் தொட்டிகள் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் ஆராய்ச்சி மற்றும் புதிய நிர்மாணத் துறையில் ஈடுபட்டு குள முறைமைகளை சுத்திரகரிப்பதற்காக குளங்களில் காணப்படும் ஜப்பன் ஜபர என்ற தாவரத்தை நீக்கும் இயந்திரத்தை உருவாக்கி சர்வதேச விருதுபெற்ற புத்தாக்குனரான நாமல் உதார பியசிறியை ஜனாதிபதி பாராட்டினார்.

ருவன்வெலி மகா சேய விகாராதிபதி சங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் ஏனைய சமய தலைவர்கள், அமைச்சர்களான பீ.ஹரிசன்,சந்திராணி பண்டார, இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Fri, 02/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை