பாராளுமன்ற குழப்பம்: அறிக்கை வெள்ளியன்று சபையில் சமர்ப்பிப்பு

7 எம்.பிக்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்​​கை

பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் ர் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமளிதுமளி தொடர்பாக விசாரணை நடத்திய விசேட பாராளுமன்ற குழுவின் அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படுமென்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி கூறினார்.  அதனையடுத்து சபாநாயகர் அந்த அறிக்கையை திலக்மாரப்பனவின் தலைமையிலான பாராளுமன்ற ஒழுக்காற்று மற்றும் சிறப்புரிமைகள் குழுவிடம் கையளிப்பார். அதேவேளை, இந்த அறிக்கை இன்னும் சட்ட மாஅதிபரிடம் கையளிக்கப்படவில்லை என்று கூறிய பிரதி சபாநாயகர், இது தொடர்பாக பாராளுமன்ற ஒழுக்காற்று மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் பரிந்துரைகளை எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டார். 

இந்த அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு 10 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு, நாளை புதன்கிழமை கூடவுள்ளது. அதேநேரம் மேற்படி சம்பவங்கள் தொடர்பான சி.ஐ.டி.யினரின் விசாரணை துரிதப்படுத்தப்படுவதாகவும் அவை சுதந்திரமாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதி சபாநாயகர் கூறினார். 

மேற்படி அறிக்கையின் ஒரு பிரதி கடந்த மாதம் ஊடகத்துக்கு கசிந்தது. அறிக்கையில் 59 பாராளுமன்ற உறுப்பினர்களின் தவறான நடத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  54 உறுப்பினர்களும்  ஐக்கிய தேசியக் கட்சியின் நான்கு உறுப்பினர்களும் ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இவர்களில் பாராளுமன்றத்தினுள் மிகவும் மோசமாக நடந்துகொண்ட 7 உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சலுகைகள் சட்டம் மற்றும் பொதுச்சொத்து சட்டம் ஆகியவற்றின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர்களின் மோதல் மற்றும் சேதம் காரணமாக 3 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இந்த அறிக்கை நாளை முதல் இணையத்தில் வெளிவரும். ஊடகங்கள் மற்றும் அக்கறையுள்ள தரப்பினர் அதனை எடுத்துக்கொள்ள முடியும் என்றும் 6 பேர் கொண்ட விசேட குழுவுக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.  

மிளகாய்த்தூள் கலந்த நீர் மற்றும் நாற்காலி ஒன்றின் மூலம் பொலிஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை, சபைக்குள் கத்தியொன்றை மறைத்துக்கொண்டு வந்தமை, சபாநாயகரின் நாற்காலி மீது தண்ணீர் ஊற்றியமை, அரசியலமைப்பு மற்றும் ஏனைய புத்தகங்களின் பிரதிகளை உறுப்பினர்கள் மீது வீசியெறிந்தமை, கைகலப்பில் ஈடுபட்டமை, தலைமை தாங்கியோர் மீது வசை பாடியமை, போலியான சபை நடவடிக்கைகளை மேற்கொண்டமை ஆகியவையே கடந்த நவம்பர் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களில் சிலவாகும். 

 

Tue, 02/19/2019 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை