அறிக்கையை வெளியிட்டிருந்தால் விளக்கம் கோரப்படும்

வெலிக்கடை சிறைச்சாலை சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை பொலிஸ் திணைக்களத்தினூடாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டிருக்குமாயின் அது தொடர்பில் பொலிஸ் மாஅதிபரிடம் விளக்கம் கோரவேண்டி வருமென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, நீதி மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்தும் எந்த அதிகாரமும் பொலிஸ் மாஅதிபருக்குக் கிடையாதென்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று (20) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, வெலிக்கடை சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை காலதாமதம் அடைவது பற்றி கேள்வியெழுப்பினார். இந்த விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளின் சில பகுதிகள் ஏற்கனவே பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டி ருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், அவ்வாறு பொலிஸ் மாஅதிபருக்கு விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்த முடியாது. அதற்கான அதிகாரமும் அவருக்கில்லை. வெலிக்கடைச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்தியிருந்தால் அதற்கான விளக்கத்தை பொலிஸ் மாஅதிபரிடம் கேட்கவேண்டியிருக்கும் என்றார்.

வெலிக்கடைச் சம்பவம் தொடர்பில் விசாரிப்ப தற்காக நியமிக்கப்பட்ட குழு, அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையிலுள்ள சாட்சியங்களை உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுப்பதில் சிறிய காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், வேண்டுமென்றே அரசாங்கம் எந்த விடயத்தையும் மறைக்க முயற்சிக்கவில் லையென்றும் அவர் கூறினார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் விசாரணைக் குழுவின் பரிந்துரைகளைப் பகிரங்கப்படுத்தவோ அல்லது விசாரணை அறிக்கையை சபையில் சமர்ப்பிக்கவோ முடியாது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வேறு இடங்களில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்திய நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு ஆயிரக்கணக்கான குண்டுகளுடன் அவற்றை ஆய்வுக்காக வழங்கியுள்ளோம். ஒரு துப்பாக்கியிலிருந்து பல குண்டுகளை வெடிக்கவைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப் படுவதுடன், விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

Thu, 02/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை