அம்பாறை கரும்புச் செய்கையாளர் பிரச்சினைக்கு தீர்வு

AMF

அமைச்சர் ஹக்கீம், நவீன் இணைந்து நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் கரும்புச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள், அமைச்சர் நவீன் திசாநாயக்கவிடம் விடுத்த கோரிக்கைகளையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் கரும்புச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் நேற்று (13) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவை சந்தித்து, தங்களது பிரச்சினைகளை எடுத்துக்கூறி அவற்றுக்கு உரிய தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

கரும்பு செய்கை விவசாயிகள் விடயத்தில் கல்ஓயா பெருந்தோட்ட (தனியார்) நிறுவனத்தின் செயற்பாடுகளினால் தங்களது வாழ்வாதாரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கரும்புச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் சுட்டிக் காட்டினர்.

1990 – 2012காலப்பகுதியில் யுத்த சூழ்நிலை காணப்பட்டபோதும் குறித்த நிலங்களில் நெற் செய்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், தற்போது நஷ்டத்துக்கு மத்தியிலும் தங்களை தொடர்ந்து கரும்பு செய்கையில் ஈடுபடுமாறு வலியுறுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டோரின் கோரிக்கைளை செவிமடுத்த அமைச்சர் நவீன் திசாநாயக்க, குழுவொன்றை நியமித்து, இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து 45நாட்களுக்குள் அறிக்கை ஒன்றை தம்மிடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். இந்தக் குழுவின் அறிக்கையை தொடர்ந்து கரும்பு செய்கை விவசாயிகளின் பிரச்சினைக்கு சாதகமான தீர்வை வழங்குவதாக அமைச்சர் நவீன் இதன்போது உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், பராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் உயரதிகாரிகள், கல்ஓயா பெருந்தோட்ட (தனியார்) நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

(அம்பாறை மாவட்ட குறூப் நிருபர் - அப்துல்கபூர்)

Thu, 02/14/2019 - 10:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை