மன்னாரில் வழங்கப்படும் வீட்டுத்திட்டத்தில் பாரபட்சம்

Rizwan Segu Mohideen
மன்னாரில் வழங்கப்படும் வீட்டுத்திட்டத்தில் பாரபட்சம்-Mannar Housing Scheme-PS Anton Gerome

நேசக்கரம் பிரஜைகள் குழு தலைவர் பி.எஸ். அன்ரன் ஜெரோம்

மன்னார் பகுதியில் வழங்கப்படும் வீட்டுத்திட்டத்தில் அதிகமாக பாதிப்புக்குள்ளான மக்களை விடுத்து பாரபட்சமான முறையில் வீட்டுத் திட்டம் வழங்கப்படுவதாக மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் நேசக்கரம் பிரஜைகள் குழு தலைவர் பி.எஸ். அன்ரன் ஜெரோம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (8) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,

இவ் வீட்டுத் திட்டமானது புள்ளி அடிப்படை என்றும், போரில் பாதிப்பு அடைந்தவர்கள் என்றும்  தெரிவித்தே இவ் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் உண்மையில் நீண்ட காலமாக மிகவும் பாதிப்படைந்த நிலையில் வீடுகளை அமைக்க முடியாத மிகவும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழுகின்ற மக்கள் அதிகமானோர் மன்னார் மாவட்டத்தில் இருக்கின்றார்கள்.

மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற பல குடும்பங்கள் கடன் சுமையாலும் தொழில் இன்றியும் சரியான ஒரு வீட்டு வசதிகள் அற்ற நிலையில் இப்பகுதியில் வாழ்கின்றார்கள்.

அத்துடன் தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீட்டுத் திட்டத்திலும் பல குடும்பங்களில் மத்தியில்  வீட்டுத் திட்டங்கள் வழங்குகின்ற போதும் கடன் சுமை குறைவதற்குப் பதிலாக மேலும் கடன் சுமை அதிகரிக்கப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது ஒரு வீட்டுத் திட்டத்துக்காக சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டு வரைப்படத்தை வழங்கிவிட்டு மிகவும் குறைந்த தொகைப் பணத்தையே வழங்குகின்றனர்.

ஆகவே இருக்கின்ற பணத்தை கொண்டு வேலையை ஆரம்பித்தாலும் ஒரு வீட்டுத்திட்டத்துக்கான பூரண பணம் கிடைக்காத போது அவ் வீட்டுத்திட்டத்தை பூரணப் படுத்தாது இடை நடுவில் கைவிடும் நிலையே காணப்படுகின்றது.

அத்துடன் பூரணமாக்காத வீட்டுக்கு செலவழித்த பணத்தையும் பெறமுடியாத நிலை காணப்படுவதாகவும் மன்னாரைப் பொறுத்த மட்டில் ஒரு டிப்பர் மண் 32 ஆயிரம் ரூபாவாகும். ஆகவே இவ்வாறு இருக்கும் போது மன்னார் பகுதியில் வழங்கப்படும் வீட்டுத்திட்டத்துக்கு ஒரு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் தங்களுக்கு ஒரு வீட்டை அமைப்பதில் பல்வேறு சிரமத்தை எதிர் நோக்குகின்றனர்.

ஆகவே மன்னார் மாவட்டத்தில் புள்ளி அடிப்படையில் வீடுகள் வழங்குவதில் ஒரு புறமிருக்க மிகவும் வறுமைக் கோட்டுக்குள் வாழும் மக்களை இனம் கண்டு அவர்களுக்கும் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படுவதுடன் அதற்கான சரியான செலவுத் தொகையும் வழங்கப்பட வேண்டும்.அத்துடன் உண்மையாக ஒரு வீட்டுத்திட்டத்தை வழங்கும் போது அதற்கான மதிப்பீடு செய்யப்படும் தொகையையும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

(மன்னார் குறூப் நிருபர் - லம்பர்ட் ரொசாரியன்)

Fri, 02/08/2019 - 16:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை