நுண் கடன் நிறுவனங்களை கண்காணிக்க அதிகார சபை

நுண்கடன் வழங்கும் நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் அதிகாரசபை ஒன்று அமைக்கப்படவுள்ளதுடன், அவற்றைக் கண்காணிப்பதற்கு ஏற்ற வகையில் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற தேசிய பொருளாதார சபையில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

நாடு முழுவதிலும் 160 பில்லியனுக்கும் அதிகமான கடன்கள், நுண்கடன் நிறுவனங்களூடாகப் பெறப்பட்டிருப்பதாக தேசிய பொருளாதார சபையின் செயலாளர் நாயகம் பேராசிரியர் லலித்.பி.சமரக்கோன் தெரிவித்தார்.

கிராமப் பகுதிகளில் நுண்கடன் நிதி நிறுவனங்களால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நுண்கடன்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் தேசிய பொருளாதார சபை, மத்திய வங்கி மற்றும் நுண்கடன் நிறுவனங்களை அழைத்து கலந்துரையாடியது. இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய பொருளாதார சபையின் 25ஆவது கூட்டத்திலும் விரிவாகக் கலந்துரையாடப் பட்டது. இவற்றைக் கட்டுப்படுத்துவதாயின் கண்காணிப்பு அதிகார சபையொன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விளக்கமளித்த தேசிய பொருளாதார சபையின் பிரதி செயலாளர் நாயகம் ஹரீந்திர திசாபண்டார, பத்தாயிரத்துக்கும் அதிகமான நுண்கடன் நிதியங்கள் இருக்கின்றன. எனினும் மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்வதற்கு 16 நிதி நிறுவனங்கள் மாத்திரமே விண்ணப்பித்துள்ள ன. அவற்றில் நான்கு நிறுவனங்களை மாத்திரமே பதிவுசெய்ய முடியும். அது மாத்திரமன்றி அரச சார்பற்ற நிறுவனங்களும் நுண்கடன்களை வழங்கி வருகின்றன. எனினும்,46 அரசசார்பற்ற நிறுவனங்கள் மாத்திரமே அதற்குரிய செயலகத்தில் பதிவு செய்துள்ளன. இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் நிதி நிறுவனங்களாகப் பதிவு செய்யாமல் நுண்கடன்களை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிறுவனங்களால் 160 பில்லியனு க்கும் அதிகமான ரூபா நுண்கடன்களாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு 30 முதல் 35 வீதத்துக்கும் அதிகமான வட்டி அறவிடப் படுகிறது. எனினும், சில நிறுவனங்களால் நாளொன்றுக்கு நூற்றுக்கு ஒரு வீதம் வட்டியாக அறவிடப்படுகிறது. இவற்றைக் கண்காணிப்பதற்கான பொறிமுறையொன்று இன்னமும் இல்லை. நிதி நிறுவனங்களைக் கண்காணிப்பதற்கு 2016ஆம் ஆண்டில் சட்டமொன்று கொண்டுவரப்பட்டாலும் மத்திய வங்கியினால் அவற்றை முழுமையாகக் கண்காணிக்க முடியாத நிலை காணப்படுகிறது. பண வைப்புக்களை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களை மாத்திரமே மத்திய வங்கியினால் கண்காணிக்க முடியும். எனினும் நுண்கடன் வழங்கும் பெரும்பாலான நிறுவனங்கள் வைப்புக்களை ஏற்றுக் கொள்வதில்லை.

அது மாத்திரமன்றி அந்த நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களிடமிருந்து கடனைப் பெற்றே அவற்றை நுண்கடன்களாக மக்களுக்கு வழங்குகின்றன. இதனால் அதிக வட்டியை அவர்கள் அறவிடுகின்றனர்.

அதேநேரம், நுண்கடன் நிதி நிறுவனங்களில் பெற்றுக் கொள்ளும் கடன்கள் பெரும்பாலும் நுகர்வுக்கான கடன்களாக உள்ளன. கடனாகப் பெற்றுக்கொண்ட பணம் செலவு செய்யப் பட்டதும் அவற்றை மீளச்செலுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். எனவே நுண்கடன் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன்கள் மீள் உற்பத்திக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையானவையாக இருக்க வேண்டும் என்றும் தேசிய பொருளாதார சபைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டு நுண்கடன் நிதி நிறுவனங்களைக் கண்காணிக்க அதிகார சபையொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வரைபுகளை மத்திய வங்கி ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாக தேசிய பொருளாதா சபையின் செயலாளர் நாயகம் பேராசிரியர் லலித்.பி.சமரக்கோன் தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

 

Thu, 02/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை