இந்திய விமானப்படை யுத்த ஒத்திகை; பாகிஸ்தான் எல்லையில் பெரும் பதற்றம்

பதிலடி கொடுக்கப்படுமென மோடி சூளுரை 

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேரைப் பலி கொண்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்திய, பாகிஸ்தான் எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் எல்லைக்கு அருகேயும், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பொக்ரானிலும் இந்திய விமானப்படை மிகப் பெரிய போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. இரவு, பகலாக ஏராளமான விமானங்கள், ஹெலிகொப்டர்கள், ஏவுகணைகள், சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி பயிற்சியில் ஈடுபடுகின்றன.'வாயுசக்தி' என்று இந்த ஒத்திகைக்குப் பெயரிடப்பட்டிருந்தது.  

'புல்வாமாவில் எமது வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்' என்று இந்த ஒத்திகை குறித்து கருத்து வெளியிட்ட விமானப்படைத் தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார்.  

இந்த ஒத்திகையில் தரைப்படைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பி.எஸ். தனோவா, கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  

இரவு, பகலாக நடத்தப்பட்ட ஒத்திகை குறித்து கருத்துக் கூறிய விமானப்படை தளபதி "அரசு உறுதியளித்துள்ளபடி, எந்தநேரத்திலும் தகுந்த பதிலடி கொடுப்பதற்காக இந்திய விமானப்படை தயாராகி வருகிறது.

அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாட்டின்பாதுகாப்பு தொடர்பான விஷயத்திலும், இறையாண்மையைக் காப்பதிலும் இந்திய விமானப்படை தகுதியுடன் இருக்கிறது என்பதற்கு உறுதியளிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.  

இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்க இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது.இலகு ரக போர் விமானங்கள், தொழில்நுட்ப மேம்பாடு கொண்ட ஹெலிகொப்டர்கள், தரையிலிருந்து ஏவப்பட்டு விண்ணிலுள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட 'ஆகாஷ்' ஏவுகணை, விண்ணிலுள்ள இலக்கைத் தாக்கி அழிக்க விண்ணிலிருந்து ஏவப்படும் 'அஸ்திரா' ஏவுகணை, சிறிய ரொக்கெட்டுகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை இந்த ஒத்திகையின்போது பயன்படுத்தப்பட்டன.   மேலும், எஸ்யூ- 30, மிக்- 27, எல்.சி.ஏ. தேஜாஸ், மிராஜ் -2000, ஹாக் ஆகிய போர் விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டன.  

இதேவேளை இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க இராணுவத்துக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  

"காஷ்மீர் புல்வாமா பகுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மிகப் பெரிய தவறிழைத்து விட்டனர்.அவர்கள் மிகப் பெரிய விலையைக் கொடுப்பார்கள். அவர்கள் கடும் பின்விளைவுகளைச் சந்திப்பார்கள். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாகக் கூறினார்.  

இந்தத் தற்கொலைத் தாக்குதலின் போது உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்தே அதிக வீரர்கள் பலியாகியுள்ளனர். 12 பேர் உ.பி.யைச் சேர்ந்தவர்கள். அடுத்ததாக பஞ்சாப் மாநிலத்தில் 4 வீரர்கள் பலியாகியுள்ளனர். தமிழகம் 2 வீரர்களைப் பலிகொடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜி. சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.  

இது இவ்விதமிருக்க புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்கவரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த 'வர்த்தகத்துக்கு உகந்த நட்புறவு நாடு' எனும் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு இரத்து செய்து விட்டது.  

ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திடீரென வாபஸ் பெற்று ஜம்மு, காஷ்மீர் நிர்வாகம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.இதன்படி, பிரிவினைவாத தலைவர்கள், மிர்வாஸ் உமர் பரூக், அப்துல் கானி பாட், பிலால் லோன், ஹசிம் குரோஷி, ஷபிர் ஷா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நேற்று மாலை விலக்கிக் கொள்ளப்பட்டது.  

இந்தியாவின் தற்காப்புக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக அந்த நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார்.இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியா கூறியபோது,"பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத குழுக்கள் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளன. அந்தத் தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு தோள் கொடுப்போம்" என்று தெரிவித்தார்.  

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை ஜம்முவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மதரீதியான பதற்றம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்களுக்குச் சொந்தமான உடைமைகள் சேதமாக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி சமூக வலைத்தளங்கள் அங்கு முடக்கப்பட்டுள்ளன.   

Mon, 02/18/2019 - 10:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை