ஈரானுக்கு எதிரான வார்சோ மாநாட்டில் சவூதி, இஸ்ரேல் இடையில் ஒற்றுமை

வார்சோ மாநாட்டில் அரபு நாடுகளுடன் ஒன்றிணைந்து ஈரானுக்கு எதிராக குரல் கொடுத்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா ஏற்பாடு செய்த இந்த இரண்டு நாள் மாநாட்டின் ஆரம்ப நாளான கடந்த புதன்கிழமை இரவு விருந்து, “வரலாற்று திரும்புமுனை” என்று நெதன்யாகு செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

“சுமார் 60 வெளிநாட்டு பிரதிநிதிகள் கூடிய அறையில், இஸ்ரேல் பிரதமர் மற்றும் முன்னணி அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஒன்றாக இணைந்து ஈரானிய அரசுக்கு எதிரான ஒற்றுமையை வெளிப்படுத்தினோம்” என்று நெதன்யாகு கூறினார்.

வார்சோவில் உள்ள அரச மாளிகையில் இடம்பெற்ற இந்த இரவு விருந்தில் நெதன்யாகு ஒரே மேசையில் அமர்ந்து சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் நாட்டு மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மூன்று நாடுகளும் இஸ்ரேலுடன் எந்த இராஜதந்திர உறவையும் பேணாத நிலையில் ஈரான் தொடர்பில் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளன. எகிப்து மற்றும் ஜோர்தான் ஆகிய இரு அரபு நாடுகளுடன் மாத்திரமே இஸ்ரேல் இராஜதந்திர உறவை கொண்டுள்ளது.

இந்த மாநாட்டின்போது நெதன்யாகு ஓமான் வெளியுறவு அமைச்சர் யூசுப் பின் அலவி பின் அப்துல்லாஹ்வை பரஸ்பரம் சந்தித்தார். ஈரான் உட்பட பிராந்தியத்தின் அனைத்து நாடுகளுடனும் ஓமான் நல்லுறவை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அச்சுறுத்தலுக்கு எதிராகவும், சிரிய, யெமன் மற்றும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பிலுமே இந்த மாநாடு ஏற்படு செய்யப்பட்டிருந்தது.

Fri, 02/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை