பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு வரவு -செலவுத் திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார்.  

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நுண்கடன்களைப் பெற்றுச் சுமைகளுடன் உள்ள பெண்களுக்கு அதிலிருந்து அவர்களை விடுவிக்கும் வகையில் காசோலைகளைக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே, மாவை சேனாதிராஜா எம்.பி இக்கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பில் ஏற்கனவே அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அமைச்சர்களான மங்கள சமரவீர, ரிசாட் பதியுதீன், ராஜித சேனாரட்ண, அகில விராஜ் காரியவசம், அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பி.க்களான எம்.ஏ சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய மாவை சேனாதிராஜா எம்.பி, நுண்கடன்களைப் பெற்று பெரும் வட்டியை அதற்காக செலுத்துவதில் பெருமளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, பெண்கள் பெரும் சிக்கல்களுக்குள்ளாகியுள்ளனர்.  

நிதியமைச்சின் ஏற்பாட்டில், அவர்களை கடன் சுமையிலிருந்து விடுவிக்கும் வகையில், நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்காக பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் நாம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.  

நுண்கடன்களை வழங்கும் வங்கித்துறையினர் எமது பெண்களை மிக மோசமான அவல நிலைக்கு தள்ளியுள்ளனர். இந்த நிலையில், அக்கடன்கள் தொடர்பில் நாம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். பல முறை அது தொடர்பில் வலியுறுத்தியுள்ளோம். இதற்கிணங்க, அரசாங்கத்தினால், அதற்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது.  

வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களின் பிரச்சினை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு விஜயம் செய்துள்ளார் என்றும் மாவை சேனாதிராஜா எம்.பி மேலும் தெரிவித்தார்.

யாழ்.நகரிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்,   யாழ். குறூப் நிருபர்  

Fri, 02/15/2019 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை