ஆணைக்குழுக்களுக்கு எதிரான விமர்சனங்கள் போதை ஒழிப்புக்கு இடையூறு

பிரதமர்

சுயாதீன ஆணைக்குழுக்கள் மீதான விமர்சனங்கள், அச்சுறுத்தல்கள் போதைப் பொருளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு இடையூறாக அமைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாளிகாவத்தையில் 1536 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாளிகாவத்தை லஹிரு செவன வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 384 வீடுகளை மக்களிடம் கையளித்து உரையாற்றிய பிரதமர் மேலும் தெரிவித்ததாவது:

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு அமைய, சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்து போதைப்பொருள் வர்த்தகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டம் வெற்றியளித் துள்ளது. இதைப் பலவீனப்படுத்த முயற்சிக்கும் சில சக்திகளை அரசு தோற்கடிக்கும். அரசியல் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு போதைப் பேரழிவிலிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க சகலரும் முன்வர வேண்டும்.

நீதிமன்றங்களை கால்பந்துகளாகப் பயன்படுத்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.

2015 – 2016 காலப்பகுதியில் போதைப்பொருள் வர்த்தகம், போதைப்பொருள் பாவனைகள் மேலோங்கிக் காணப்பட்டன. இதனைத் தடுத்தல்,போதைப்பொருளை ஒழித்தல் தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம். இதற்காக அதிக நிதி ஒதுக்க வேண்டுமா எனவும் கேட்டோம். இதற்கு அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கள் எம்மை அதிர்ச்சியடையச் செய்தன.

நிதியை அதிகரிப்பதை விட நம்பகத் தன்மையும், நியாயமான நீதிமன்றமுமே தேவைப்பாடாக உள்ளது எனத் தெரிவித்தனர். கடந்த காலங்களைப் போன்று பொலிஸாரின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கக்கூடாது என்பதை அதிகாரிகள் வலியுறுத்தினர். எமது கண்களைக் கட்டிப் போட்டு போதைபொருள் வர்த்தகத்தையும், குற்றச் செயல்களையும் ஒழிக்கச் சொன்னால் எம்மால் அதனை செய்ய முடியுமா என அதிகாரிகள் எம்மிடம் கேள்வி எழுப்பினர்.

அதிகாரிகளுக்கு தொல்லை ஏற்படாமலும் அவர்களது செயற்பாடுகளில் குறுக்கிடாமலும் போதை ஒழிப்புக்கு காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம். உயிரச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது,சவாலுக்கு முகம் கொடுக்க முன்வந்த அந்த அதிகாரிகளை தைரியப் படுத்தினோம் என்றார்.

எம்.ஏ.எம். நிலாம்

 

Thu, 02/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை