ஒரு தரப்பின் நலனை முதன்மைப்படுத்திய அரசியல் தீர்வு நிரந்தரமானதல்ல

ஒரு தரப்பின் நலன்களை மாத்திரம் முதன்மைப்படுத்திய வகையில் உருவாக்கப்படும் அரசியல் தீர்வுகள் நிரந்தரமானதாக அமையாது. மாகாண சபைக் கட்டமைப்புக்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும். மக்களின் பிரச்சினைகளுக்கான அர்த்தமுள்ள தீர்வுகள் எதனையும் மாகாண சபைகளால் கொடுக்க முடியவில்லை என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். 

எனவேதான் நாட்டிற்குரிய அரசியல் தீர்வென்பது சகல மக்களின் பிரச்சினைகளையும் உள்வாங்கிய, நீதியான ஒரு தீர்வாக முன்வைக்கப்பட வேண்டும். அத்துடன் 'அரசியல் தீர்வென்பது அரசியல் வாதிகளுக்குரிய தீர்வாக அமையாது மக்களுக்கான தீர்வாக அமைய வேண்டும் என்றார். NFGG யின் வருடாந்த பேராளர் மாநாடு 'அனைவருக்குமான அரசியல் தீர்வே நிரந்தர தீர்வாகும்’ என்ற தொனிப்பொருளில் கிண்ணியாவில் இடம்பெற்றது.அதில் விசேட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது கூறியதாவது,... 

புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதும் தேசிய அரசியலில் இன்று பிரதான பேசுபொருளாக மாறியிருக்கின்றது. இதனை சாதித்துக் காட்டுவோம் என்ற வாக்குறுதியினை ஒவ்வொரு அரசாங்கமும் அளித்திருந்தும் அதனை இதுவரை எவரும் செய்து முடிக்கவில்லை. ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான அர்த்தபூர்வமான அணுகு முறைகளைக்கூட இன்னும் காணவில்லை. இந்த இடத்தில் ‘அனைவருக்குமான அரசியல் தீர்வே நிரந்தரமான தீர்வாகும்’ என்ற தலைப்பு மிகவும் முக்கியமானதும் பொருத்தமானதுமாகும். 

‘அனைவருக்குமான தீர்வென்பது’ இங்கு ஊன்றிச் சொல்லப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் கடந்த கால அனுபவங்களை மீட்டிப்பார்க்கின்ற பொழுது அரசியல் தீர்வாக பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட விடயங்கள் எதுவும் 'அனைவருக்குமான தீர்வாக அவை இருக்க வேண்டும்’ என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டவில்லை. ஒரு இனத்தை அல்லது பிரதேசத்தை முதன்மைப்படுத்துவதாகவே தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.  

1987 இல் கொண்டு வரப்பட்டு, சட்டமாக்கப்பட்ட அரசியல் தீர்வு இதற்கு நல்ல உதாரணமாகும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13வது அரசியலைப்புத் திருத்தம் அவசரமாகக்கொண்டு வரப்பட்டது. அதுவரை தனித்தனி மாகாணங்களாக இருந்த வடக்கும் கிழக்கும், கிழக்கு மக்களின் விருப்பத்தைக் கேட்டறியாமலே இணைக்கப்பட்டன. இதனால் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் பலம் ஒரே நாளில் சிதைக்கப்பட்டது. வடகிழக்கு மாகாண அரசு உருவாக்கப்பட்டது. இறுதியில் அதுவும் இயங்க முடியாத நிலையில் முடங்கியது. இப்பொழுது இயங்குகின்ற மாகாண சபைகளோ அல்லது அதன் மூலம் கொடுக்கப்பட்ட அதிகாரங்களோ அர்த்தபூர்வமான எந்தத் தீர்வுகளையும் கொண்டுவந்ததாகவும் தெரியவில்லை.

ஒரு பிரதேசத்தின் அல்லது சமூகத்தின் நலனை மாத்திரம் முதன்மைப்படுத்திய வகையில் கொண்டுவரப்பட்ட அந்தத் தீர்வு இன்று அர்த்தமற்ற ஒன்றாக மாறியிருக்கின்றது. எனவேதான் நாட்டிற்குரிய அரசியல் தீர்வென்பது சகல மக்களின் பிரச்சினைகளையும் உள்வாங்கிய நீதியான ஒரு தீர்வாக முன்வைக்கப்பட வேண்டும் என்றார்.

ஆரையம்பதி தினகரன் நிருபர்

 

ஆரையம்பதி தினகரன் நிருபர்

Sat, 02/09/2019 - 09:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை