பழுதடைந்த பஸ்களைத் திருத்தி சேவைக்கு வழங்கும் திட்டம்

ஏகல கிராமத்திலுள்ள லக்திவ பொறியியல் நிறுவனத்தின் திறமையான நடவடிக்கைகளால், பழுதடைந்த 6பஸ்களை ஒரு மாத காலத்துக்குள்  நவீனமயப்படுத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முடிந்துள்ளது. இந்த ஆறு பஸ்களும் நேற்றுமுன்தினம் நுவரெலியா எம்பிலிப்பிட்டிய, பண்டாரவளை, மொரட்டுவை, மீதொட்டமுல்ல, கம்பஹா ஆகிய ஆறு டிப்போக்களுக்கு வழங்கப்பட்டன.

போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன் மூலம் ஏகலயிலுள்ள லக்திவ நிறுவனத்திற்கு 13மில்லியன் ரூபா வருமானமாகக் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த வைபவத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அர்ஜுன ரணதுங்க: எதிர்காலத்தில் இந்த நிறுவனத்தின் சேவைத்திறனை மேம்படுத்த் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், ஒரு மாதத்துக்குள் குறைந்தபட்சம் 12பஸ்களையாவது மீளத்திருத்தி சேவைக்குவிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.   அதேசமயம், பஸ்களைப் புதுப்பிப்பதுடன், மேலதிகமாக மேலும் பொறியியல்த்துறை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருமானத்தை அதிகரிக்கச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும்  அவர் தெரிவித்தார்.  

லக்திவ பொறியியல் நிறுவனத்தின் அடிப்படை நோக்கம், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் நிறுவனங்களின் பழுதடைந்த பஸ்களை மீளத்திருத்தி சலுகை விலை அடிப்படையில் பெற்றுக்கொடுபப்பதாகும். இதில் இ. போ. ச. பஸ் வண்டிகளைத் திருத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

(எம். ஏ. எம்.நிலாம்)

Thu, 02/21/2019 - 09:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை