வங்குரோத்து அரசியல்வாதிகள் அப்பாவிகளை குழப்ப முயற்சி

எதிர்க்கட்சியில் வங்குரோத்து அரசியல் செய்யும் தலைவர்கள் அரசாங்கம் நாட்டை பிளவுபடுத்தும் அரசியலமைப்பை கொண்டுவரப் போவதாக கூறி அப்பாவி மக்களை அச்சத்திற்குள்ளாக்கி வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 747 இலட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பலப்பிட்டிய  பிரதேச செயலாளர் காரியாலயத்தின் மூன்று மாடி கட்டடத்தை அங்குரார்ப்பணம்  செய்துவைக்கும் நிகழ்வில் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே பிரதமர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.    

இங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க: அரசியலமைப்பை திருத்துவதற்கு முன்பதாக தயாரிக்கப்படும்  சட்டமூலம் கூட இதுவரை தயாரிக்கப்படவில்லை.

அரசியலமைப்பின் வழிகாட்டல் குழுவின் தலைவராகத் தான் செயற்படும்  நிலையிலும் அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களிடம் இதுவரை எந்த யோசனைகளையும் முன்வைக்க கோரவில்லை.சில கட்சிகள் புதிய அரசியலமைப்பை தயாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் உள்ளதால் அக்கட்சிகள் முன்வைக்கும் யோசனைகளை மக்கள் தீர்மானத்துக்கு உட்படுத்தி அதற்கிணங்க பெரும்பான்மை விருப்புக்கு ஏற்ப அரசியலமைப்பு சட்டமூலம் உருவாக்கப்படும்.

எதிர்வரும் காலங்களில் அரசியலமைப் புக்கான சட்டமூலம் பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கிணங்க முன்வைக்கப்படும்.

இதன் போது தனது தனிப்பட்ட யோசனையாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிக்கும் யோசனையை வலியுறுத்துவேன். இதில் எந்த விவாதத்திற்கும் இடமில்லை.

70 வருடங்களுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தாலே ஒற்றையாட்சி உருவாக்கப்பட்டுள்ளது.தமிழ் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் சமஷ்டி அரசாங்கமொன்று அவசியமென முதல்முறையாக குறிப்பிட்டிருந்தார்.

இதனைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் யுத்தத்திற்கு பின்னர் சமஷ்டி அரசாங்கம் அவசியமென கூறிய தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடன் நல்லாட்சி அரசை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தினேன். இதன்போது அவர்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டனர்.   

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கான யோச னையை முன்வைத்துள்ளன.

இந்தக் கட்சிகளை விடுத்து ஏனைய கட்சிகளுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் தேர்தல் எந்த முறைமையில் நடத்தப்படும் என்ற கேள்வி தற்போது பெரும் பிரச்சினையாகியுள்ளது.

கட்சித் தலைவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது, மூன்று பிரதான கட்சிகள் விகிதாசார முறையில் தேர்தலை நடத்தி,அரசாங்கம் அமைப்பதற்காக சிறிய கட்சிகளை இணைத்துக் கொண்டு அவற்றின்  வாக்கு விகிதாசாரங்களுக்கு இணங்க, அக்கட்சிகளுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

எனினும் மேற்படி யோசனை தொடர்பில் சிறு கட்சிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை, சம விகிதாசார முறையையே இக்கட்சிகள் கோருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். (ஸ)  

(லோரன்ஸ் செல்வநாயகம்)   

Mon, 02/11/2019 - 10:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை