மாக்கந்துரே மதுஷ், சகாக்களின் கைது நீண்டகால திட்டத்தின் இறுதி வெற்றி

அமைச்சர் சாகல ரத்னாயக்க ​பெருமிதம்

பாரிய குற்றங்களில் ஈடுபடுபவராக கருதப்படும் போதைப்பொருள் வர்த்தகரான மாக்கந்துரே மதுஷ் மற்றும் அவரின் சகாக்களை கைது செய்தமை நீண்ட கால திட்டத்தின் இறுதிக் கட்ட வெற்றியென அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.  

கொழும்பு துறைமுகத்தில் நேற்று (07) மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரத்னாயக்க கூறியதாவது, சுயாதீனமான பொலிஸ் ஆணைக்குழு மூலமாக பொலிஸ் சேவையின் சுயாதீனத்தன்மை நிலைநாட்டப்பட்டுள்ளது. நவீன பயிற்சிகள் மற்றும் அடிப்படை வசதிகளை முன்னேற்றியதால் இத்திட்டத்தை  வெற்றிக்கொள்ள முடிந்தது.  

மூத்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எம். ஆர். லத்தீப்பின் வழிக்காட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இத் திடீர் சோதனை பிரிவு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நான் இருந்த காலத்தில் நிறுவப்பட்டமை விசேட அம்சமாகும். பொலிஸ் விசேட அதிரடிப்படை , போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவு ஆகியன ஒரு பிரிவாக அறிவிக்கப்பட்டது. 

'இப் பிரிவை அமைக்கும்போது இதற்கு உகந்த தலைவர் லத்தீப் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். எனவே அவரை அப்பதவிக்கு தேர்ந்தெடுத்தோம். இவ்வாறான ஒரு குற்றவாளியை கைது செய்வோம் என்ற நோக்கத்துடன் மிகவும் பொறுமையாக செயற்பட வேண்டுமென எமக்கு தெரியும்.  

இப்பிரிவின் அதிகாரிகள் நீண்ட காலமாக மதுஷ் மற்றும் அவரின் சகாக்களை பின்தொடர்ந்தனர்.  ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் இறுதி தறுவாயிலும் அவர்கள் பொலிஸ் வலையிலிருந்து தப்பித்தனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அப்துல்லா பின் சயீட் அல் நஹ்யான் 2017ஆம் ஆண்டு இலங்கை வந்தபோது, நானும், பிரதமரும்  இது தொடர்பாக உதவி கோரினோம்.ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான முன்னாள் தூதுவரும் இந் நடவடிக்கைக்கு சிறந்த சேவை செய்தார்.

'நாம் அரசாங்கத்தை அமைக்கும் போது பல ஆண்டுகளாக பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. உலகிலுள்ள எந்தவொரு நாட்டிலும் பொலிஸ்துறை சிறப்பாக செயற்பட வேண்டுமாயின் அவ்வதிகாரிகளுக்கு கட்டாயமாக பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். நாம் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கினோம். எம்முடைய இவ் வேலைதிட்டத்தின் பலாபலன்களை 2017ஆம் ஆண்டு இறுதியில் அனுபவிக்க முடிந்தது.

Fri, 02/08/2019 - 08:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை