மதுஷ்கவை அழைத்துவர இராஜதந்திர ஏற்பாடுகள்

துபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் முக்கிய புள்ளியான மாக்கந்துரே மதுஷ் உள்ளிட்ட 25பேரை நாட்டுக்குள் அழைத்து வருவது தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சு நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவர்களை நாடு கடத்துவது தொடர்பில் கொழும்பிலுள்ள துபாய் தூதரகத்தினூடாக பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பிரபல ஹோட்டலொன்றில் நடத்தப்பட்ட விருந்துபாசார நிகழ்வொன்றின்போது கைது செய்யப்பட்ட மேற்படி கும்பலில் மதுஷ் இருப்பதை துபாய் செய்திச் சேவை ஊர்ஜிதம் செய்துள்ளது.  மேலும் இக்கும்பலில் இலங்கையின் பிரபல பாடகரான அமல் பெரேரா மற்றும் அவரது மகன் நதிமல் பெரேரா ஆகியோர் இருந்ததையும் துபாய் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. 

கைதின்போது இவர்களிடமிருந்து பெருந்தொகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மதுஷ் உள்நாட்டில் இடம்பெற்ற பாரிய கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவரென்ற குற்றச்சாட்டுக்காக கடந்த இரண்டு வருடங்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவராவார்.

(லக்ஷ்மி பரசுராமன்)

Thu, 02/07/2019 - 08:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை