மாகாண சபைத் தேர்தல், தேசிய அரசாங்கம் அமைத்தல்; கட்சித் தலைவர்கள் இன்று ஆராய்வு

மாகாண சபைத் தேர்தல் மற்றும் தேசிய அரசாங்கத்தை அமைத்தல் குறித்து இன்று புதன்கிழமை நடைபெறவிருக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படவிருப்பதாக சபை முதல்வரும் அரச தொழில் முயற்சி, கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசாங்கம் அவற்றைபெரும் சவாலாக எதிர்கொண்டு செயற்பட்டு வருகிறது. இவ்விடயங்களில் அரசாங்கம் பிரதமரின் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளை ஏற்று மிகக் கவனமாக  இயங்கிக் கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்தார்.

இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முன்னர் ஆளும் கட்சிப் பாராளுமன்றக் குழுக்கூட்டமும் இடம்பெறவுள்ளது. அங்கு நாம் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளோம். மாகாண சபைத்தேர்தல்களுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் தடையாகச் செயற்படவில்லை. சுதந்திரக்கட்சித்தரப்பே புதியமுறையில் தேர்தலை நடத்த வேண்டுமென விலியுறுத்தி வந்தது. ஆனால் புதியமுறையில் நடத்த எல்லை நிர்ணயச் செயற்பாடுகள் பூரணப்படுத்தப்படவில்லை. பொறுப்பான அமைச்சர் புதிய முறையில் தேர்தல் நடத்த முடியாததை ஏற்றுக்கொண்டார். அவ்வாறெனில் பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு நாம் கோரினோம். அதற்கும் ஆரம்பத்தில் அவர்கள் தடையாகவே செயற்பட்டனர். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் எவ்வித சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை. பழைய முறையில் தேர்தலை நடத்தும் பொருட்டு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டால் மட்டும் போதும். அதற்கென புதிதாக யோசனை முன்வைக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

மாகாண சபைத் தேர்தலையோ, வேறு எந்தத் தேர்தலையோ கண்டு நாம் பயப்படவில்லை. இதில் அச்சத்தில் தடுமாறுபவர்கள் சு. க.வும், மொட்டுத்தரப்புமேயாகும். அவர்களுக்கிடையில் தான் பிரச்சினை காணப்படுகிறது என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தேசிய அரசாங்கம் அமைக்கும் விடயத்திலும் நாம் பின்வாங்கிவிடவில்லை. அதேநிலைப்பாட்டையே நாம் கொண்டிருக்கின்றோம். ஆரம்பத்தில் ஆதரவுதர முன்வந்த சிலர் அச்சுறுத்தப்பட்டதன் காரணமாக யோசிக்கத் தொடங்கினர். இப்போதும் நிலைமை சாதகமாகவே உள்ளது. இப்போது பலர் ஆதரவு தர உடன்பட்டுள்ளனர். அரசின் பதவிக்காலம் இன்னும் ஒரு வருடத்திற்கும் அதிகமாகவே உள்ள நிலையில் ஆட்சியைப் பலப்படுத்திக்கொண்டு திட்டங்களை முன்னெடுக்கவே தேசிய அரசாங்கத்தை அமைக்க எண்ணியுள்ளோம். இன்றைய பாராளுமன்றக் குழுக்கூட்டத்திலும், கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் எட்டப்படக் கூடிய முடிவுகளுக்கமைய எமது அடுத்த கட்ட செயற்பாடுகள் அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

எம். ஏ. எம். நிலாம்

Wed, 02/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை