புலிகளின் பகுதியில் உயிரிழந்த இராணுவ வீரரை தேடிச் சென்ற மனைவி - பிள்ளைகள்

அஞ்சலி செலுத்தி மரங்களை நாட்டினர்

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் காட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய சமயத்தில், விடுதலைப்புலிகளின் முறியடிப்பு அணிகளின் தாக்குதலில் உயிரிழந்த இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி (Long Range Reconnaissance Patrol -LRRP) தளபதியான லெப்.கேர்ணல் லலித் ஜெயசிங்க வின் நினைவாக கடந்த சனிக்கிழமை (23) முல்லைத்தீவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் காட்டுப் பகுதியில் லலித் ஜெயசிங்க உயிரிழந்த இடத்தில்- அவரது மனைவி, மகள், பெற்றோரால் மரக்கன்றுகள் நடப்பட்டன. அடர்ந்த காட்டுக்குள் ஜி.பி.எஸ் துணையுடன் சுமார் 2.7 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்றே அவர் கொல்லப்பட்ட இடத்தை இந்த குழு அடைந்தது.

மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் 4 வது புலனாய்வு படையணி என்பவனவற்றின் வழிகாட்டலில் ஜெயசிங்கவின் அஞ்சலி நிகழ்வு நடந்தது.

படைத்தரப்பினர் அவர் உயிரிழந்த இடத்திற்கு வழிகாட்டிச் சென்றனர். சம்பவம் நடந்த இடம் ஆழ ஊடுருவும் படையணியினர் புலிகளின் பகுதிக்கு சென்று தங்கியிருக்கும் தரிப்பிடமாக இருந்ததால் அதன் புவியியல் அமைவிடம் ஜி.பி.எஸ் மூலம் சுலபமாக கண்டறியப்பட்டிருந்தது. அடர்ந்த காட்டுக்குள் ஜெயசிங்க உயிரிழந்த இடத்தில் மௌன அஞ்சலி செலுத்தி சில மரங்கள் நடப்பட்டன.

 மாங்குளம் குறூப் நிருபர்

Tue, 02/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை