ஐ.எஸ் குழுவின் கடைசி கோட்டையில் ஐந்தாவது நாளாகவும் உக்கிர மோதல்

நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

கிழக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி கோட்டையில் ஐந்தாவது நாளாகவும் நேற்று உக்கிர மோதல் நீடித்ததோடு சுருங்கி வரும் அந்த நிலப்பகுதியில் இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

ஈராக் நாட்டு எல்லையை ஒட்டிய பங்கூஸ் கிராமத்தில் ஐ.எஸ் தனது கடைசி நிலையை தக்கவைத்துக் கொள்ள அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயக படையுடன் சண்டையிட்டு வருகிறது. எனினும் குர்திஷ் தலைமையிலான இந்தப் படை ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது.

இந்த தட்டையான, பாலைவன சிறு நகரில் இருந்து கறும்புகை வெளிவந்த வண்ணம் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ் குழுவின் வெளிநாட்டு போராளிகளே அங்கு பெரும்பாலும் நிலைகொண்டிருப்பதாக சிரிய ஜனநாயக படையின் களத்தில் இருக்கும் தளபதிகளில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு சிரியா மற்றும் ஈராக்கை இணைத்து கலீபத் பிரகடனம் ஒன்றை வெளியிட்ட ஐ.எஸ் குழு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் தற்போது ஈராக் எல்லையை ஒட்டிய நான்கு சதுர மைல்களுக்கு குறைவான நிலத்திற்கு சுருங்கியுள்ளது.

அமெரிக்க ஆதரவு படையால் ஒரு வாரத்திற்கு மேல் கடைப்பிடிக்கப்பட்ட மோதல் நிறுத்த காலத்தில் ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறினர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அந்தக் குழுவுக்கு எதிரான கடைசி யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.

யுத்த வலயத்தில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை 600 பொதுமக்கள் வரை தப்பி வந்ததாக சிரிய ஜனநாயக படையின் பேச்சாளர் முஸ்தபா பாலி குறிப்பிட்டுள்ளார்.

பங்கூஸ் கிராமத்திற்கு முகப்பாக அமெரிக்க ஆதரவுப் படை மணல் சுவர்களை அமைத்துள்ளது. எனினும் அந்த கிராமத்தின் தென் பகுதியில் உக்கிர மோதல் இடம்பெற்று வருகிறது.

இங்கு குர்திஷ் தலைமையிலான படை மிக மந்தமாகவே முன்னேறி வருகிறது. அந்தப் படைக்கு ஆதரவாக அமெரிக்கா தொடர்ந்து பங்கூஸ் மீது வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறி வந்த சுமார் 300 பொதுமக்கள் டிரக் வண்டிகளில் வடகிழக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் பட்டினியுடன் முற்றாக சோர்வடைந்த நிலையிலேயே தோன்றியதோடு சில சிறுவர்கள் வெறுங்கால்களுடன் இருந்தனர்.

இவர்களில் பலரும் ஈராக், துருக்கி, உக்ரைன் அல்லது ரஷ்ய நாட்டவர்களாக உள்ளனர்.

இவ்வாறு தப்பி வருபவர்கள் அமெரிக்க மற்றும் சிரிய ஜனநாயக படையினரின் கடும் விசாரணைக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து 400 முதல் 600 வரையான ஐ.எஸ் போராளிகள் தனது கடைசி கோட்டையில் நிலைகொண்டிருக்கலாம் என்று அமெரிக்க ஆதரவுப் படை நம்புகிறது. இந்தப் போராளிகளின் மனைவி மற்றும் குழந்தைகளே அங்கு தொடர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது.

“குண்டுகள் நம்ப முடியாத அளவில் உள்ளது. நாம் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடம் என்று தப்பியோடினோம்” என்று ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து தனது ஐந்து குழந்தைகளுடன் தப்பி வந்த 29 வயது ஹலா ஹஸன் குறிப்பிட்டார்.

அங்கு எல்லா நாடுகளைச் சேர்ந்த போராளிகளும் இருப்பதாக அவர் கூறினார். “அங்கு எந்த உணவும் இல்லை. மைதானங்களில் ஆடுகள் போன்று நாம் புற்களைத் உண்டோம். ஐ.எஸ் வீதிகளை முடக்கியுள்ளது. அங்கிருந்து தப்பிவர ஆட்கடத்தல்காரர்கள் ஆயிரம் டொலர்கள் கேட்கின்றனர்” என்றும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களில் ஐ.எஸ் போராளிகளின் மனைவிமார் மற்றும் குழந்தைகளை பெரும்பான்மையாகக் கொண்ட 37,000க்கும் அதிகமானவர்கள் அமெரிக்க ஆதரவுப் படையின் கட்டுப்பாட்டு பகுதிக்கு தப்பி வந்திருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் சிரிய ஜனநாயக படையினரால் சுமார் 3,400 ஐ.எஸ் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

“ஐ.எஸ் போராளிகளிடம் இருந்து நாம் கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளோம்” என்று சிரிய ஜனநாயகப் படையின் களத்தில் உள்ள தளபதி அத்னன் அப்ரின் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டார்.

“இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டினர், ஈராக்கியர், ஐரோப்பியர். துருக்கியரும் அதிகமாக உள்ளனர். வோக்கி டோக்கியில் அவர்களை கேட்க முடிகிறது” என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஜிஹாதிக்கள் தற்போது கிராமத்தின் ஒரு சதுர கிலோமீற்றர் பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

சிரிய ஜனநாயக படையின் முன்னேற்றத்திற்கு அமெரிக்காவின் வான் தாக்குதல்கள் தீர்க்கமாக அமைந்துள்ளது. பங்கூஸ் முகாம் ஒன்றின் மீது கடந்த திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஒன்றில் 16 பொதுக்கள் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஏனைய வெளிநாட்டு படைகள் நாட்டில் சட்டவிரோதமாக நிலைகொண்டிருப்பது, அதன் குற்றச்செயல்கள், ஆக்கிரமிப்பை உடன் நிறுத்தும்படி சிரிய வெளியுறவு அமைச்சு ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

ஐ.எஸ் குழுவிடம் இருந்து ரக்கா நகரை கைப்பற்றிய பின்னரே சிரிய ஜனநாயகப் படை பங்கூஸ் கிராமம் உள்ள டெயிர் அல் சோர் மாகாணத்தில் முன்னேற்றம் கண்டது. யூப்ரடிஸ் நதியின் கிழக்கு பக்கமாகவே இந்தப் படை நடவடிக்கை அமைந்துள்ளது.

எனினும் நதியின் மேற்காக அமைந்துள்ள நிலப்பகுதி சிரிய இராணுவம் வசமுள்ளது. இங்கு மீண்டும் கால்பதிப்பதற்கு ஐ.எஸ் முயன்று வருகிறது.

ஐ.எஸ். குழுவுக்கு எதிராக இன்னும் சில நாட்களுக்குள் வெற்றி பிரகடனம் வெளியிடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

Thu, 02/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை