கொக்ெகயின் விவகார அறிக்கை; நேற்று ஐ.தே.க செயற்குழுவிடம் கையளிப்பு

ஐக்கிய தேசிய கட்சி எம்.பிக்கள், அமைச்சர்கள் எவரும் இல்லை

பாராளுமன்ற உறுப்பினர்கள் கொக்ெகயின் போதைப் பொருள் உபயோகித்துள்ளதாகக் கூறப்படுவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கூற்றுக் கிணங்க நடத்தப்பட்ட குழு விசாரணை அறிக்கை நேற்று ஐ.தே.க. செயற்குழுவுக்கு கையளிக்கப்பட்டதாகவும் அதில் ஐ.தே.க. உறுப்பினர்கள் எவரும் உள்ளடங்கவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.தே. கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஸ்ரீகொத்தவில் நடைபெற்றது. இதன்போதே பிரதமர் இத் தகவலை செயற்குழுவிடம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.

அதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் கூற்று தொடர்பில் நேற்றைய செயற்குழு கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க: மேற்படி அறிக்கைக்கு இணங்க ஐ. தே.கவின் எந்தப் பாராளுமன்ற உறுப்பினரதும் பெயர் இவ்வறிக்கையில் உள்ளடங்கவில்லையென்றும் வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க தமக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்றும் தெரிவித்தார்.

தேவையேற்பட்டால் இரகசிய பொலிஸாரின் அறிக்கையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் என்ற வகையில் உரிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ மக்கள் சேவையின் போதும் கருத்துக்களை வெளியிடும் போதும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

கொக்கேயின் உபயோகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தாம் முன்வைத்துள்ள கூற்று சம்பந்தமாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஐ. தே. க. செயற்குழுவிடம் தெளிவு படுத்தினார்.

கொக்கேயின் உபயோகிப்பவர்கள் தொடர்பில் தாம் தெரிவித்த கூற்றை ஊடகங்கள் திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாகவும் அவர் ஐ. தே. க. செயற்குழுவிடம் தெரிவித்தார். ‘குடு காரர்கள் யாரென்பதை தாம் ரகசிய பொலிஸாரிடம் செல்லும் போது ஒப்புவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தாம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனக் கூறியதை முன்னாள் என்ற சொல்லை தவிர்த்து விட்டுஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேற்படி கூற்றை ஆராய்வதற்கென ஐ. தே. க. செயற் குழுவால் நியமிக்கப்பட்ட குழுவில் ராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார ஆகியோர் உள்ளடங்குகின்றனர். (ஸ)

 

Thu, 02/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை